மகிளா காங்கிரஸ் தலைவி பணப்பட்டுவாடா செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை


மகிளா காங்கிரஸ் தலைவி பணப்பட்டுவாடா செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை
x
தினத்தந்தி 7 April 2017 11:15 PM GMT (Updated: 2017-04-08T04:45:13+05:30)

குண்டலுபேட்டையில் மகிளா காங்கிரஸ் தலைவி பணப்பட்டுவாடா செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

மைசூரு,

குண்டலுபேட்டையில் மகிளா காங்கிரஸ் தலைவி பணப்பட்டுவாடா செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

மாநில காங்கிரஸ் தலைவரும், போலீஸ் மந்திரியுமான பரமேஸ்வர் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வெற்றி பெறுவது உறுதி

குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதி. கடந்த ஒரு வாரமாக இங்கேயே தங்கி இருந்து பிரசாரம் செய்துள்ளோம். அப்போது மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருப்பது தெளிவானது. பொதுமக்கள் மாநில அரசின் சாதனைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.

இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் மந்திரிகள் குழுக்கள் முகாமிட்டு இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் மந்திரி ஆவதற்கு முன்னர் தொண்டர்கள் என்பதை மறக்காதவர்கள். கட்சியை வளர்ப்பது, பிரசாரம் செய்வது தொண்டனின் கடமை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

எந்த ஆதாரமும் இல்லை

கட்சியின் மாநில தலைவராகிய நானே என்னுடைய பொறுப்பில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களை பிரசாரத்திற்கு அனுப்பி உள்ளேன். இதில் எந்த தவறும் இல்லை. தேர்தல் சமயத்தில் நாங்கள் அனைவரும் தொண்டர்களே. தொண்டர்களாக இருந்து தான் நாங்கள் மந்திரியாக உயர்ந்துள்ளோம்.

குண்டலுபேட்டையில் மகிளா காங்கிரஸ் தலைவி பணப்பட்டுவாடா செய்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் அவர் பணப்பட்டுவாடா செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒருவேளை அவர் பணப்பட்டுவாடா செய்திருந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story