ஒடிசாவில் மதகலவரம் அரசு 48 மணி நேரங்களுக்கு சமூக வலைதளங்களை தடை செய்தது


ஒடிசாவில் மதகலவரம் அரசு 48 மணி நேரங்களுக்கு சமூக வலைதளங்களை தடை செய்தது
x
தினத்தந்தி 10 April 2017 4:18 AM GMT (Updated: 10 April 2017 4:17 AM GMT)

ஒடிசாவில் மதகலவரம் ஏற்பட்டதை அடுத்து வதந்திகள் பரவாமல் இருக்கும் வகையில் சமூக வலைதளங்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசாவின் பாத்ராக் பகுதியில் சமூக வலைதளங்களில் இந்து கடவுகளை அவமதிக்கும் விதமாக கருத்து பதிவிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையம் முன்னதாக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது வன்முறை வெடிக்கவே வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகத்தை ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தச் செய்தது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் கடைகள் மற்றும் வாகனங்களை தீ வைத்து கொழுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது, உடனடியாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். ஒடிசா மாநில சிறப்பு படை பிரிவினர் மற்றும் துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

பாத்ராக் பகுதியில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ள துணை ராணுவப் படையினர் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இப்போது நிலையானது கட்டுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள 4 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டது. இதற்கிடையே வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸ் 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்து உள்ளது. பதற்றமான நிலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மாநிலத்தில் மேலும் இச்சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரவாமல் இருக்கும் வகையில் மாநில உள்துறை அமைச்சகம் 48 மணி நேரங்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உள்ளது. சமூக வலைதளங்கள் வாயிலாக வதந்திகள் பரப்பப்படுகிறதா என்பதை கண்காணிக்க குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் பொதுமக்களை தூண்டிவிட அனுமதிக்க கூடாது எனவும் பதற்றம் உருவாக கூடாது எனவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்கள் வழியாக போலியான தகவல்களை வெளியிடுபவர்கள் தொடர்பாக தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்களிடமும் உதவி கேட்கப்பட்டு உள்ளது. பாத்ராக் மற்றும் அதனை சுற்றிய பகுதிகள் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது. பொதுமக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story