தென்னிந்தியர்கள் பற்றி தருண் விஜய் சர்ச்சைக்குரிய கருத்து, பாராளுமன்றத்தில் காங்கிரஸ் நோட்டீஸ்


தென்னிந்தியர்கள் பற்றி தருண் விஜய் சர்ச்சைக்குரிய கருத்து, பாராளுமன்றத்தில் காங்கிரஸ் நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 April 2017 4:42 AM GMT (Updated: 10 April 2017 4:42 AM GMT)

தென்னிந்தியர்கள் பற்றி பா.ஜனதா தலைவர் தருண் விஜய் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

பா.ஜனதா முன்னாள் எம்.பி. தருண் விஜய் கத்தார் நாட்டின் பிரபல அல்-ஜஷீரா தொலைக்காட்சியில் டெல்லியில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த கருப்பர் இன மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நடந்த விவாதத்தில் கலந்துக் கொண்டார். அப்போது தருண்விஜய் கூறும்போது,‘‘நாங்கள் நிறவெறியர்கள் என்றால் ஏன், தென்னிந்தியர்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வசிக்கும் கருப்பர்களுடன் சேர்ந்து வாழவேண்டும்?... எங்களை சுற்றி கருப்பர் இன மக்களும் இருக்கிறார்கள். இந்தியாவை நிறவெறி கொண்டவர்கள் என்று கூற முடியாது” என்றது பெரும் சர்ச்சையை எழுப்பியது. தருண் விஜயின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிராக கருத்துகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து ட்விட்டரில் தருண் விஜய் மன்னிப்பு கேட்டார். இந்தியாவில் கறுப்பு நிறக் கடவுள் கிருஷ்ணனை வழிபடுகின்றனர். என்னுடைய வார்த்தைகள் நான் சொல்ல வந்த கருத்தை வெளிப்படுத்த போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். எனினும், என்னுடைய கருத்தால் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது என்ன வென்றால், நாம் நிறவெறியை எதிர்த்து போராட்டம் நடத்தி இருக்கிறோம். 

இந்தியாவில் பல்வேறு நிறமுள்ள, கலாச்சாரம் கொண்டவர்கள் வாழ்கின்றனர். எனினும், நம்மிடம் நிறவெறி இல்லை. அதேசமயம் தென்னிந் தியர்கள் கறுப்பர்கள் என்று நான் எப்போதும் சொன்னதில்லை. வாய் தவறி கூட நான் அப்படி சொல்ல மாட்டேன். என்னுடைய சொந்த நாட்டை, மக்களை, கலாச்சாரத்தை நான் எப்படி கேலி செய்வேன். அதற்குப் பதில் நான் இறந்துவிடுவேன் இவ்வாறு தருண் விஜய் கூறினார். 

இந்நிலையில் பா.ஜனதா தலைவர் தருண் விஜய் தென்னிந்தியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி நோட்டீஸ் வழங்கி உள்ளது.

Next Story