மருத்துவமனையில் குண்டுப்பெண்ணின் சகோதரி செவிலியர்களுடன் மோதல் போலீசுக்கு அழைப்பு


மருத்துவமனையில் குண்டுப்பெண்ணின் சகோதரி செவிலியர்களுடன் மோதல் போலீசுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 28 April 2017 7:22 AM GMT (Updated: 28 April 2017 7:22 AM GMT)

மும்பை மருத்துவமனையில் குண்டுப்பெண் எமான் அகமதுவின் சகோதரி செவிலியர்களுடன் மோதலில் ஈடுபட்டு உள்ளார், இதனால் போலீசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


மும்பை,

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது36). இவர் 11 வயதாக இருந்த போது பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கையானார். சுமார் 25 ஆண்டுகள் படுக்கையிலேயே கழிந்த நிலையில் எமான் அகமதுவின் எடை 500 கிலோவை நெருங்கியது. இதையடுத்து மும்பை சர்னி ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடைகுறைப்பு சிகிச்சைக்காக கடந்த 11-ந்தேதி எமான் அகமது அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் முப்பாஷால் என்பவர் சிகிச்சை அளித்து வருகிறார்.

 இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எமான் அகமதுவின் எடை 250 கிலோவுக்கு மேல் குறைந்துவிட்டதாக டாக்டர் முப்பாஷால் தகவல் வெளியிட்டார். இந்த நிலையில் எமான் அகமதுவின் உதவிக்காக அவருடன் மும்பை வந்த அவரின் சகோதரி சாய்மா சலீம், “டாக்டர் முப்பாஷால், எமான் அகமதுவின் உடல் எடை பாதியாக குறைந்திருப்பதாக தவறான தகவல்களை வெளியிட்டு உள்ளார்” என்று தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், “சிகிச்சையின் ஒவ்வாமை காரணமாக இரவு முழுவதும் எமான் அகமது அழுது கொண்டே இருக்கிறார். 

எனவே அவரை இந்தியாவில் இருந்து வேறு ஏதேனும் நாட்டிற்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் டாக்டர்கள் எங்களை மிரட்டி போக விடாமல் தடுத்து வருகிறார்கள். இதுகுறித்து எகிப்து நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டு முறையிட உள்ளோம்” என்றார். இந்த நிலையில் அபுதாபியை சேர்ந்த 4 டாக்டர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் நேற்று மும்பைக்கு வருகை தந்தனர். அவர்கள் மருத்துவமனையில் இருந்த எமான் அகமதுவை சந்தித்து பேசினர். பின்னர் சிகிச்சை அளித்த டாக்டர் முப்பாஷாலிடம் சிகிச்சை அளிக்கப்பட்ட விபரங்களை கேட்டறிந்தனர்.

இதன்மூலம் எமான் அகமது சிகிச்சைக்காக அபுதாபிக்கு கொண்டுசெல்லப்பட இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து டாக்டர் முப்பாஷால் கூறுகையில், “ சாய்மா சலீம் மருத்துவமனையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். எமான் அகமதுவுக்கு வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நான் தடுக்க மாட்டேன். இது குறித்து மேலும் நான் பேச விரும்பவில்லை” என்று தெரிவித்தார். 

 எமான் அகமதுவின் உறவினர்கள் எளிதாக அவரை பார்க்கும் வகையில் எமிரெட்ஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தங்கள் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் சிறப்பான முறையில் தங்களுடைய பணியை செய்தார்கள், எமான் அகமது முன் எப்போதும் இல்லாத வண்ணம் மிகவும் வேகமாக குணம் அடைந்தார். அவருக்கு இனி நரம்பியல் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையானது அவசியம். எமான் அகமது கார்கோ விமானத்தில் இங்குவந்தார், இப்போது ஒரு பயணியாக விமானத்தில் பிசினஸ் கிளாசில் செல்கிறார். 23/9/16 தேதியின் படி எமான் அகமதுவின் உடல் எடை 500 கிலோ, இப்போது அவருடைய எடை 176.6 கிலோ என மருத்துவமனை டாக்டர் பாஸ்கர் கூறிஉள்ளார். 

செவிலியர்களுடன்

நேற்றுஇரவு எமான் அகமதுவின் சகோதரி செவிலியர்களுடன் மோதலில் ஈடுபட்டு உள்ளார், இதனால் போலீசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சிகிச்சை பெற்று வரும் எமான் அகமதுவிற்கு விதிமுறையை மீறி சாய்மா வாய் வழியாக தண்ணீரை ஊற்றி உள்ளார். அதனை பார்த்த செவிலியர்கள் குழாய் வழியாகவே அவருக்கு திரவப்பொருட்கள் வழங்க வேண்டும் என தடுத்து உள்ளனர், ஆனால் சாய்மா செவிலியர்களுடன் மோதலில் ஈடுபட்டு உள்ளார். செவிலியர்கள் உயர் மருத்துவர்களிடம் முறையிட்டு உள்ளனர். பல்வேறு முறை அறிவுரை கூறியும் சாய்மா இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக போலீசாரிடம் மருத்துவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர், இதனையடுத்து நிலை சரியானது என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் மருத்துவமனையில் போலீஸ் வந்தபின்னர் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. 

மருத்துவர்கள் பேசுகையில், “எமான் அகமதுவை மிகவும் தீவிரமாக நாங்கள் கண்காணித்து வருகிறோம், அவருக்கு குழாய் வழியாகவே திரவப்பொருள் கொடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சாய்மா ஊசியின் மூலம் எமான் அகமதுவின் வாயில் தண்ணீரை ஊற்றிஉள்ளார். இதனை பார்த்த செவிலியர்கள் தடுக்க முயற்சித்து உள்ளனர். இவ்வாறு தண்ணீரை ஊற்றினால் அது எமான் அகமதுவின் நுரையீரலுக்கு செல்லும் உயிரிழக்கவும் செய்யும் எனவும் கூறினோம்,” என தெரிவித்து உள்ளனர். போலீசார் பேசுகையில் நோயாளி சிறந்த முறையில் கவனிக்கப்பட்டு வருகிறார், நாங்கள் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தஒரு புகாரும் பெறவில்லை என்றனர். 

Next Story