அமைச்சர் காமராஜ் மீது எப்.ஐ.ஆர். பதிவு; உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தகவல்


அமைச்சர் காமராஜ் மீது எப்.ஐ.ஆர். பதிவு; உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தகவல்
x
தினத்தந்தி 6 May 2017 9:29 AM GMT (Updated: 2017-05-06T14:59:05+05:30)

அமைச்சர் காமராஜ் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ள தகவலை தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழக அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவு துறை மந்திரியாக பதவி வகிக்கும் அமைச்சர் காமராஜ் மீது எஸ்.வி.எஸ். குமார் என்பவர் போலீசில் பணமோசடி புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தன்னுடைய நிலத்தில் இருப்பவர்களை வெளியேற்ற அமைச்சர் ரூ.30 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

இந்நிலையில், தனது புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.  அமைச்சர் காமராஜ் மீதுள்ள மோசடி புகார் பற்றி எடுத்த நடவடிக்கைகள் அடங்கிய கூடுதல் பிரமாண பத்திரத்தினை வருகிற 6ந்தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரமாண பத்திரம் தாக்கல்

இந்நிலையில், அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ள தகவலை தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

உறவினர் மீதும் வழக்கு

அமைச்சரின் மைத்துனர் ராமகிருஷ்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  அவர் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ராமகிருஷ்ணன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு பிரிவுகளில் வழக்கு

அமைச்சர் காமராஜ் மீது ஐ.பி.சி. 420, 506 (1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  அவர் மீது மிரட்டல் மற்றும் மோசடி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story