காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் மெகபூபா முப்தி


காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் மெகபூபா முப்தி
x
தினத்தந்தி 6 May 2017 2:48 PM GMT (Updated: 2017-05-06T20:18:26+05:30)

காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என நம்புவதாக காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் பிரதமர் மோடியை காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி சந்தித்து பேசினார். அப்போது 70 ஆண்டு காலமாக காஷ்மீரில் நீடிக்கும் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமரை சந்தித்த பின் வெளியே வந்த முப்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடியால் மட்டுமே காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியும் என நம்புகிறேன். காஷ்மீர் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அவர் அளித்துள்ளார். மோடியை தவிர வேறு யாராலும் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. காஷ்மீர் பிரச்சனை குறித்து ஆலோசிக்க முன்னாள் பிரதமர் பாகிஸ்தான் செல்ல முயன்றார் அது முடியவில்லை. ஆனால் பிரதமர் மோடி லாகூருக்கு சென்று வந்தார். இது அவரது திறமைக்கு ஒரு சான்று. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முயன்றார். ஆனால் அதன் பிறகு வந்த அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுக்க வில்லை. முகம்மது சயீத் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தி வந்தனர். 2008-ம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக மக்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதரண சூழ்நிலையால் மாநில வளர்ச்சி பாதிக்காது. ஜம்மு காஷ்மீரில் பல சுற்றுலாதலங்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story