கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த பாபா ராம்தேவின் சொந்த கிராமத்தில் யோகா பயிற்சிக்கு ஆள் இல்லை


கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த பாபா ராம்தேவின் சொந்த கிராமத்தில் யோகா பயிற்சிக்கு ஆள் இல்லை
x
தினத்தந்தி 21 Jun 2017 10:45 PM GMT (Updated: 21 Jun 2017 8:29 PM GMT)

கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த பாபா ராம்தேவின் சொந்த கிராமத்தில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஆள் இல்லை.

சண்டிகார்,

உடலுக்கும், மனதுக்கும் வலு சேர்க்கிற யோகா கலையை உலகமெங்கும் கொண்டு போய்ச் சேர்ப்பதில் யோகா குரு பாபா ராம்தேவுக்கு முக்கிய பங்கு உண்டு.

இவருடைய பூர்விகம், அரியானா மாநிலம், சைதாலிபூர். இங்கு 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்ட வேளையில், இந்த சைதாலிபூரிலும் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆள் இல்லாத சோகம்

ஆனால் சோகம் என்னவென்றால், இங்கு யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்கு மக்களிடம் போதுமான ஆதரவு இல்லை. ஆர்வமும் இல்லை.

இங்கு நடந்த யோகா தின கொண்டாட்டத்தில் 30 முதல் 40 பேருக்குள்தான் கலந்து கொண்டனர். 90 நிமிடங்கள் நடந்த இந்த பயிற்சியில் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை.

60 வயதான அமர்ஷா என்பவர்தான் அனைவரையும் யோகா செய்ய வழிநடத்தினார்.

‘குடும்பத்துடன் தொடர்பு இல்லை’

இதுபற்றி அமர்ஷா கூறும்போது, “பாபா ராம்தேவின் வெற்றி மீது கிராம மக்கள் பலரும் பொறாமை கொண்டுள்ளனர். எனவே மக்கள் அவருக்கு ஆதரவு தருவதில்லை” என்று குறிப்பிட்டார்.

பாபா ராம்தேவின் மூத்த சகோதரர் தேவ்தத், “நான் இன்று (நேற்று) யோகா பயிற்சியில் ஈடுபடவில்லை. ராம்தேவுக்கு குடும்பத்துடன் தொடர்பு இல்லை. நானும் அவரை சார்ந்து இருக்கவில்லை. அவர் கடைசியாக இங்கு 2008-ம் ஆண்டு வந்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

கின்னஸ் சாதனை முயற்சி

இதற்கிடையே பாபா ராம்தேவ், குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி ஒரே நேரத்தில் 3 லட்சம் பேரை யோகா பயிற்சியில் ஈடுபட வைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

5 மைதானங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் குஜராத் மாநில அரசும் இணைந்து செயல்பட்டது.

பயிற்சி தொடங்குவதற்கு முன்பு பாபா ராம்தேவ் கூறுகையில், “100 நுழைவு வாயில்களை கொண்டுள்ள மைதானங்களில் கின்னஸ் சாதனை ஏட்டின் அதிகாரிகள் வந்துள்ளனர். 100 பிரமாண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி, சுமுகமாக நடப்பதற்கு உதவியாக பதஞ்சலி யோகா பீடத்தின் சார்பில் 10 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இது உலகின் மிகப்பெரிய நிகழ்ச்சி” என்று குறிப்பிட்டார்.

அவருடன் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் மழை பெய்து கொண்டிருந்தது, யோகா பயிற்சியில் பங்கேற்க விரும்பிய மக்களுக்கு தடையாக அமைந்து விட்டது என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 

Next Story