ஜனாதிபதி தேர்தல்: மீராகுமார் வேட்புமனுவை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்


ஜனாதிபதி தேர்தல்: மீராகுமார் வேட்புமனுவை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்
x
தினத்தந்தி 26 Jun 2017 6:18 AM GMT (Updated: 26 Jun 2017 6:17 AM GMT)

ஜனாதிபதி தேர்தல் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் மீராகுமார் வேட்புமனுவை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

சென்னை, 

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 17-ந் தேதி நடக்கிறது. இதில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.

பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் வருகிற 28-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் மீரா குமாரின் வேட்புமனுவை தி.மு.க. முன்மொழிந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மீரா குமாரின் வேட்பு மனுவை முன்மொழிந்து அதில் கையெழுத்திட்டார். அதே போல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும், தி.மு.க. எம்.பி.க்களும் கையெழுத்திட்டனர். இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. அபுபக்கரும் அதில் கையெழுத்திட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த படிவத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மாணிக்தாக்கூர் பெற்றுக்கொண்டார்.அதே போல் தமிழக காங்கிரஸ் சார்பில் 7 எம்.எல். ஏ.க்கள், மீரா குமாரின் வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளனர்.மீராகுமார் நாடு முழுவதும் சென்று காங்கிரஸ் ஆதரவு கட்சிகளின் எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.


Next Story