பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதால் கைது செய்யப்பட்ட 15 பேர் ஜாமீனில் விடுதலை


பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதால் கைது செய்யப்பட்ட 15 பேர் ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 27 Jun 2017 3:54 PM GMT (Updated: 27 Jun 2017 3:54 PM GMT)

மத்திய பிரதேசத்தில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதால் கைது செய்யப்பட்ட 15 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பர்கான்பூர்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் வெற்றி பெற்றதை மத்திய பிரதேச மாநிலம் பர்கான்பூரில் உள்ள மோகத் நகரில் சில இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து போலீசார் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து, 15 பேரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். கைதான அனைவரும் 19 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாது. குற்றம் நிரூபணம் செய்யப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். கடுமையான பிரிவுகளின் கீழ் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது சில விமர்சனங்களை எழுப்பியது.

இதையடுத்து, தேசத்துரோக குற்றச்சாட்டு கைவிடப்பட்டு மத நல்லிணக்கத்து ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது.  குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கந்த்வா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 15 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

Next Story