அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் மத்திய மந்திரி தகவல்


அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 23 July 2017 11:00 PM GMT (Updated: 2017-07-24T02:34:33+05:30)

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்

கொல்கத்தா,

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.

நீட் தேர்வு

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க நாடு முழுவதும் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்திய போதிலும் அதற்கு பலன் இல்லாமல் போய்விட்டது.

கேள்வித்தாள் சர்ச்சை

நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்தது. ஆனால் ஒவ்வொரு மொழியிலும் கேள்வித்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்தன.

இது பாரபட்சமானது என்றும் தமிழில் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், சில மொழிகளில் கேள்வித்தாள் எளிமையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக கோர்ட்டுகளில் வழக்கும் தொடரப்பட்டது. என்றாலும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

ஒரே மாதிரியாக இருக்கும்

இந்த நிலையில், கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் இந்த பிரச்சினை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், இனி (அடுத்த ஆண்டு முதல்) நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றார். அதாவது, ஆங்கில கேள்வித்தாளின் மொழி பெயர்ப்பாகத்தான் பிற மொழிகளின் கேள்வித்தாள்கள் இருக்கும் என்று அவர் கூறினார்.

பொறியியல் படிப்புகளுக்கும் இதேபோல் தேசிய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா? என்று கேட்டதற்கு, அதுபற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், ஆனால் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார்.


Next Story