கர்ணன் தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு


கர்ணன் தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு
x
தினத்தந்தி 25 July 2017 11:00 PM GMT (Updated: 2017-07-26T01:02:48+05:30)

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறைவாசம் அனுபவித்து வரும், முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி புதிய ஜனாதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

கொல்கத்தா ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.எஸ். கர்ணன்.

இவருக்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கடந்த மே மாதம் 9–ந் தேதி உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு நீதிபதி ஒருவருக்கு பணிக்காலத்தில், இப்படி சுப்ரீம் கோர்ட்டு சிறைத்தண்டனை விதித்தது, இதுவே முதல் முறை.

அதைத் தொடர்ந்து அவர் அந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே அவர் பணியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

சி.எஸ். கர்ணன், 40 நாட்களுக்கும் மேலாக நடந்த தேடுதல் வேட்டைக்கு பின்னர் கடந்த மாதம் 20–ந் தேதி கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டு அங்கு உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக நேற்று பதவி ஏற்றுள்ள ராம்நாத் கோவிந்திடம் சிறைவாசத்தை ரத்து செய்யக்கோரி சி.எஸ். கர்ணன் தரப்பில் நேற்று முறையிடப்பட்டது.

இது பற்றி அவரது வக்கீல் மேத்யூஸ் ஜே. நெடும்பாரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்டுள்ள 6 மாத சிறைத்தண்டனையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒரு முறையீடு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூடிய விரைவில் ஜனாதிபதியிடம் நேரில் முறையிட வாய்ப்பு தேடுவோம்.

இந்த நடவடிக்கை, இந்திய அரசியல் சாசனம் பிரிவு 72–ன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story