பீகார் அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்: நீதிமன்றத்தை நாட தேஜஸ்வி யாதவ் முடிவு


பீகார் அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்: நீதிமன்றத்தை நாட தேஜஸ்வி யாதவ் முடிவு
x
தினத்தந்தி 27 July 2017 3:05 AM GMT (Updated: 2017-07-27T08:35:14+05:30)

பீகாரில் நிதிஷ் குமாரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக நீதிமன்றத்தை நாட தேஜஸ்வி யாதவ் முடிவு செய்துள்ளார்.

பாட்னா,

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பீகார் முதல்-மந்திரி பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து காட்சிகள் வேகமாக அரங்கேறின

நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பீகார் மாநில பாரதீய ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதா ஆதரவு அளிப்பதாக கூறி கடிதம் கொடுத்தார். பீகார் முதல் அமைச்சராக இன்று நிதிஷ் குமார் பதவியேற்க உள்ள நிலையில், துணை முதல்வராக சுஷில் குமார் மோடி பதவியேற்பார் என கூறப்படுகிறது. 

இதற்கிடையில், பெரும்பான்மையை நீருபிக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் நேற்று நள்ளிரவு ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றார். ஆளுநர் கேசரி நாத் திரிபாதியை சந்தித்த தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தற்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேஜஸ்வி யாதவ், சட்ட ஆலோசனைகளை நாங்கள் பெற்று வருகிறோம் எனவும் ஆளுநரின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றும் தெரிவித்தார். 

தேஜஸ்வி தனது டுவிட்டர் தளத்தில் கூறும் போது,  “ஆளுநரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம். பெரிய கட்சியான நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் நாங்கள் பெறுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.  அதேபோல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர்  வடக்கு பீகாரை பாட்னாவுடன் இணைக்கும் பிரதான பாலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீகார் அரசியலில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் திருப்பங்களால் அங்கு உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.  

Next Story