பயிர் காப்பீட்டு திட்டத்தில் 90 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்தனர்


பயிர் காப்பீட்டு திட்டத்தில் 90 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்தனர்
x
தினத்தந்தி 22 Aug 2017 12:00 AM GMT (Updated: 21 Aug 2017 8:10 PM GMT)

வேளாண்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது.

புதுடெல்லி,

வேளாண் அமைச்சக அதிகாரிகள், நிதி ஆயோக் நிர்வாகிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்ற வேளாண்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது.

இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் மூலம் 2016–2017–ம் ஆண்டில் கரீப் மற்றும் ரபி வேளாண் பருவங்களில் 90 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.7,700 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான தகவல்களை விரைவுபடுத்த ஸ்மார்ட்போன்கள், செயற்கைகோள் தகவல்கள், ஆள் இல்லாத குட்டி விமானங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டது என இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

இதேபோல் மண்வள அட்டை வழங்கும் திட்டம் முதல் கட்டமாக 16 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மற்ற மாநிலங்களில் விரைவில் இது நிறைவடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது மண் வளத்தின் மீதான ஆய்வுகள் துல்லியமாக அமையவேண்டும், கையடக்க கருவிகள் மூலம் காணும் வகையில் தொழில்நுட்பம் மேம்பட்டு இருக்கவேண்டும், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அட்டைகள் விவசாயிகள் புரிந்து கொள்ளும் விதமாக அந்தந்த மாநில மொழிகளில் அச்சிடப்பட்டு இருக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story