சசிகலாவை பெங்களூர் எம்.ஜி. சாலையில் பார்த்த காங்கிரஸ் தலைவர் டிஐஜி ரூபா தகவல்


சசிகலாவை பெங்களூர் எம்.ஜி. சாலையில்  பார்த்த காங்கிரஸ் தலைவர் டிஐஜி ரூபா தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2017 9:29 AM GMT (Updated: 22 Aug 2017 9:29 AM GMT)

பெங்களூர் சசிகலாவை எம்.ஜி. சாலையில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பார்த்து உள்ளதாக டிஐஜி ரூபா தகவல் வெளியிட்டு உள்ளார்.

பெங்களூர்

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 13–ந்தேதி, பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடியை சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் பெற்று இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி வினய்குமார், ரூபா மற்றும் சத்திய நாராயண ராவ் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது சசிகலா மற்றும் அவருடைய உறவினரான இளவரசியும் சிறைத் துறையின் விதிகளை வளைத்துப் பணத்தைக் கொடுத்து எவ்வாறு சலுகைகள் பெற்றார்கள் என்பதற்கான ஆதாரங்களை வழங்கியதாகச் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக 74 ஆதாரங்களையும் வீடியோ காட்சிகளையும் ரூபா கொடுத்ததாகச் சொல்லப்பட்டது.  இதுதொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ரூபா, “இது தொடர்பாக என்னிடம் இருந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளேன். வீடியோ காட்சிகளையும் ஆவணங்களையும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு மற்றும் கர்நாடக அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிட்டியிடம் கொடுத்துவிட்டேன். ஏற்கெனவே ஒரு வீடியோ சமர்ப்பித்திருந்தேன். தற்போது மற்றொரு வீடியோவும் கிடைத்துள்ளது. அந்த வீடியோவில், சசிகலாவும் இளவரசியும் சிறைக்கு வெளியே சென்றுவிட்டு உள்ளே நுழையும் காட்சி பதிவாகியிருக்கிறது. இது, சிறை விதிகளுக்கு எதிரானது. பரோல் இல்லாத எந்தக் கைதியும் வெளியில் செல்ல முடியாது.

அப்படியிருக்கும்போது சசிகலா செய்திருக்கும் இந்தச் செயலானது சட்டத்துக்கு எதிரானது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், என்னுடைய கடமை என்னவோ, அதன் அடிப்படையில் நான் தயார் செய்த ரிப்போர்ட்டும் இருந்துள்ளது. இதில், என் கடமையை மட்டுமே செய்துள்ளேன்.

 அதன்மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். அப்படியும் எடுக்கவில்லை என்றால், அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. அதற்குமேல் அது சிறை நிர்வாகத்தின் பொறுப்பாகிவிடுகிறது. அந்த விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக என்ன அரசியல் வேண்டுமானாலும் நடக்கலாம். மேலும், இதுதொடர்பாகக் கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி ஒருவரும் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் சொன்ன அனைத்தையும் அவரும் சொல்லியுள்ளார். நான் சொல்லாத ஒன்றையும் அவர் சொல்லியுள்ளார். ‘ஒருமுறை, சசிகலாவை எம்.ஜி. சாலையில்  பார்த்தேன் என்றும், அதைக் கண்டுதாம் அதிர்ச்சியுற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதுகுறித்து வெளியில் சொன்னால் நம்மைத்தான் மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன்' என்று அவர் குறிப்பிட்டிருந்த கடிதத்தைப் படித்துத் தெரிந்துகொண்டேன்” என்றார்.

Next Story