சிறையில் இருந்த சசிகலா அ.தி.மு.க. அமைச்சர் வீட்டுக்கு சென்று வந்தார் ரூபா அறிக்கையில் புதிய தகவல்


சிறையில் இருந்த சசிகலா அ.தி.மு.க. அமைச்சர் வீட்டுக்கு சென்று வந்தார் ரூபா அறிக்கையில் புதிய தகவல்
x
தினத்தந்தி 23 Aug 2017 5:10 AM GMT (Updated: 2017-08-23T10:40:01+05:30)

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விதியை மீறி சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு விசாரணை அறிக்கை வெளியிட்டார்.

பெங்களூர்,


சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள், தனி சமையல் கூடம், டி.வி., கட்டில், மெத்தை என வழங்கப்பட்டதாக குறிப் பிட்டு இருந்தார். இதற்காக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றார் என்றும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினர்.

சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி முன் டி.ஐ.ஜி. ரூபா புதிய ஆதாரங்களை சமர்ப்பித்தார். அதில் சசிகலா சிறையில் இருந்து சல்வார் கமீஸ் உடை அணிந்து கையில் பையுடன் சென்று வரும் வீடியோ இடம் பெற்று இருந்தது. இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா சிறையில் இருந்து வெளியில் எங்கும் செல்லவில்லை. வக்கீல்களை சந்திக்கவே பார்வை யாளர் அறைக்கு சென் றார். அதைத் தான் திரித்துக் கூறுவதாக சசிகலா ஆதர வாளர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா ஜெயிலில் இருந்து வெளியேறி ஜெயிலுக்கு அருகில் இருக்கும் ஓசூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டுக்கு சென்று வந்திருக்கலாம் என்று தனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்து இருப்பதாக ரூபா தெரிவித்துள்ளார். இதை அவர் கடந்த சனிக்கிழமை சமர்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயில் நுழைவு வாயிலில் 1-வது கேட்டுக்கும், 2-வது கேட்டுக்கும் இடையில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் சசிகலா வெளியில் சென்று வரும் காட்சிகள் பதிவாகி இருப்பதாகவும், இதன் மூலம் சசிகலா ஜெயில் அருகில் உள்ள ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்குத்தான் சென்றிருப்பார் என்றும் ரூபா குறிப்பிட்டுள்ளார். இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ரூபா கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரியாக இருக்கும் பாலகிருஷ்ண ரெட்டிதான் ஓசூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பெங்களூர் ஜெயில் அருகில் உள்ள பகுதியில் வீடு இருப்பதாகவும், அவரது வீட்டுக்குத் தான் சசிகலா சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. ரூபாவின் புதிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தம்  74 ஆதாரங்களையும் வீடியோ காட்சிகளையும் ரூபா கொடுத்ததாகச் சொல்லப்பட்டது.  இதுதொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ரூபா, “இது தொடர்பாக என்னிடம் இருந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளேன். வீடியோ காட்சிகளையும் ஆவணங்களையும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு மற்றும் கர்நாடக அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிட்டியிடம் கொடுத்துவிட்டேன். ஏற்கெனவே ஒரு வீடியோ சமர்ப்பித்திருந்தேன். தற்போது மற்றொரு வீடியோவும் கிடைத்துள்ளது. அந்த வீடியோவில், சசிகலாவும் இளவரசியும் சிறைக்கு வெளியே சென்றுவிட்டு உள்ளே நுழையும் காட்சி பதிவாகியிருக்கிறது. இது, சிறை விதிகளுக்கு எதிரானது. பரோல் இல்லாத எந்தக் கைதியும் வெளியில் செல்ல முடியாது.

அப்படியிருக்கும்போது சசிகலா செய்திருக்கும் இந்தச் செயலானது சட்டத்துக்கு எதிரானது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், என்னுடைய கடமை என்னவோ, அதன் அடிப்படையில் நான் தயார் செய்த ரிப்போர்ட்டும் இருந்துள்ளது. இதில், என் கடமையை மட்டுமே செய்துள்ளேன்.

 அதன்மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். அப்படியும் எடுக்கவில்லை என்றால், அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. அதற்குமேல் அது சிறை நிர்வாகத்தின் பொறுப்பாகிவிடுகிறது. அந்த விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக என்ன அரசியல் வேண்டுமானாலும் நடக்கலாம். மேலும், இதுதொடர்பாகக் கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி ஒருவரும் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் சொன்ன அனைத்தையும் அவரும் சொல்லியுள்ளார். நான் சொல்லாத ஒன்றையும் அவர் சொல்லியுள்ளார். ‘ஒருமுறை, சசிகலாவை எம்.ஜி. சாலையில்  பார்த்தேன் என்றும், அதைக் கண்டுதாம் அதிர்ச்சியுற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதுகுறித்து வெளியில் சொன்னால் நம்மைத்தான் மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன்' என்று அவர் குறிப்பிட்டிருந்த கடிதத்தைப் படித்துத் தெரிந்துகொண்டேன்” என கூறி உள்ளார்.

 டி.ஐ.ஜி. ரூபா புதிய சர்ச்சையையும் கிளப்பி உள்ளார். கர்நாடக ஜெயில்களில் உள்ள கைதிகள் அனைவரும் சிறைக் கைதிகளுக்கான உடைகள்தான் அணிந்து உள்ளனர். சசிகலாவும், இளவரசியும் கைதிகள்தான் அவர்களுக்கு மட்டும் சேலை, சல்வார் கமீஸ் போன்ற சொந்த உடைகள்அணிய அனுமதித்தது ஏன் என்றும், ஜெயிலில் அவர்களுக்கு ‘ஏ’ கிளாஸ் வசதிகள் மற்றும் தனி உணவுகள் வழங்கியது ஏன் என்றும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story