மருத்துவமனை பிணவறையில் இறந்த பெண்ணின் உடலை சாப்பிட்ட தெருநாய்கள் அதிர்ச்சி சம்பவம்


மருத்துவமனை பிணவறையில் இறந்த பெண்ணின் உடலை சாப்பிட்ட தெருநாய்கள் அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 27 Aug 2017 2:50 PM GMT (Updated: 2017-08-27T20:20:27+05:30)

லக்னோவில் பிணவறையில் இறந்த பெண்ணின் உடலை தெருநாய்கள் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ராம் மனோகர் லோகியா என்ற மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று தெருநாய்கள் சர்வ சாதரணமாக மருத்துவமனையின் பிணவறைக்கு சென்று அந்த இளம்பெண்ணின் உடலை கடித்து குதறி சாப்பிட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  

இறந்தவரின் உடலை அடையாளத்தை கண்டுபிடிப்பதற்கு ஊழியர்களுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. மோசமான அளவில் அந்த பெண்ணின் உடலை தெருநாய்கள் கடித்து குதறி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பிணவறை காவலர், வார்டு நபர், சூப்பரவைசர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குனர் தேவேந்திர சிங் நெகி கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இனி வரும் காலங்களில் இது போன்று கவனக்குறைவாக செயல்படும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவமனையின் பிணவறையில் தெருநாய்கள் அத்துமீறி சென்று உடலை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story