கனமழை எதிரொலி: மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு


கனமழை எதிரொலி: மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2017 3:34 AM GMT (Updated: 2017-09-20T09:04:09+05:30)

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை முடங்கியது

மும்பை,

மராட்டியத்தில் பருவமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 29–ந் தேதி பேய் மழை பெய்தது. இரவு, பகலாக பெய்த மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

அதன்பின்னர் மும்பையில் மழை பெய்யாமல் ஒரு வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, மும்பையில் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி இருந்து நகரில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக தாதர், ஒர்லி, லால்பாக், பாந்திரா, அந்தேரி, ஜோகேஸ்வரி, தாராவி ஆகிய பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.  கனமழை காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 

கனமழை காரணமாக மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பிரதான ஓடுதளம் மூடப்பட்டது. இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவா, பெங்களூர், டெல்லி, ஐதராபாத்துக்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும், 56 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் மும்பைக்கு செல்ல வேண்டிய 10-க்கு மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டன. இதற்கிடையே, கனமழை காரணமாக டப்பாவாலாக்கள் இன்று தங்களது சேவையை நிறுத்தியுள்ளனர் என மும்பை டப்பாவாலா சங்கத்தின் சுபாஷ் தலேகர் தெரிவித்துள்ளார். ரயில் சேவைகளும்  தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. 


Next Story