2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அக்டோபர் 25–க்கு பிறகு தீர்ப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அக்டோபர் 25–க்கு பிறகு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Sep 2017 11:45 PM GMT (Updated: 2017-09-21T02:00:17+05:30)

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அக்டோபர் 25–ந் தேதிக்கு பிறகு தீர்ப்பு கூறப்படும் என்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்.

புதுடெல்லி,

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பில் கடந்த 2011–ம் ஆண்டும், அமலாக்க பிரிவின் சார்பில் 2014–ம் ஆண்டும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.


2015–ம் ஆண்டு செப்டம்பர் 1–ந் தேதி இறுதி வாதம் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 26–ந் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. கடந்த ஜூலை 5–ந் தேதியன்று நீதிபதி ஓ.பி.சைனி, வழக்கு தொடர்பான சந்தேகங்களையும், திருத்தங்களையும் ஆகஸ்டு 25–ந் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் என்றும் செப்டம்பர் 5–ந் தேதிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

அன்று கோர்ட்டு கூடியபோது தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை எனவும் செப்டம்பர் 20–ந் தேதி தீர்ப்புக்கான தேதியை அறிவிப்பதாகவும் நீதிபதி ஓ.பி.சைனி கூறினார்.

அதன்படி நேற்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்ளிட்டோர் தனிக்கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

கோர்ட்டு நடவடிக்கை தொடங்கியதும் நீதிபதி ஓ.பி.சைனி, தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. தீர்ப்பு என்றைக்கு வழங்கப்படும் என்கிற தேதியை அடுத்த மாதம் (அக்டோபர்) 25–ந் தேதியன்று அறிவிப்பதாக தெரிவித்தார்.

Next Story