வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்


வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்
x
தினத்தந்தி 26 Sep 2017 9:25 AM GMT (Updated: 26 Sep 2017 9:25 AM GMT)

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி அளவில் சொத்துக்களை குவித்த மாநகராட்சி அதிகாரி ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக கைது செய்யப்பட்டு உள்ளார்.


ஐதராபாத்,



வெளிநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கலந்துக் கொள்ள திட்டமிட்டு இருந்த மாநகராட்சி அதிகாரி வெங்கட ரகுராணி ரெட்டி இப்போது சிறையில் இருக்கிறார். 

ஆந்திர பிரதேச மாநில மாநகராட்சி துறையில் நகர்புற வளர்ச்சி நிர்வாக இயக்குநராக பணியாற்றிய கோலா வெங்கட ரகுராணி ரெட்டி கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வீடு மற்றும் விசாகப்பட்டிணம், விஜயவாடா, திருப்பதி மற்றும் மராட்டிய மாநிலம் ஷீரடி உள்பட 15 இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட பின்னர் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். 

வெங்கட ரகுராணி ரெட்டிக்கு ஷீரடியில் சொந்தமான ஓட்டலும், விஜயவாடாவில் 300 ஏக்கர் அளவில் இடம் இருப்பதும் தெரியவந்து உள்ளது.

கோலா வெங்கட ரகுராணி ரெட்டி புதன் கிழமை ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறுவதையொட்டி தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வெளிநாட்டில் உள்ள சொகுசு ஓட்டலில் விருந்து அளிப்பதற்கு ஏற்பாடு செய்து இருந்து உள்ளார். அதற்காக வெளிநாட்டிற்கு செல்வதற்கு விமான டிக்கெட் எல்லாம் எடுத்து உள்ளார். ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ஆர்பி தாகூர் பேசுகையில், சோதனைகள் திங்கள் கிழமை காலையில் தொடங்கியது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது வரையில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ. 500 கோடி இருக்கும் என்றார்.

“ரெட்டியின் வங்கி லாக்கர்களை இனிதான் ஆய்வு செய்யவேண்டும். முழு சோதனையும் முடிந்த பின்னர்தான் அவருடைய மொத்த சொத்து மதிப்பை தெரிவிக்க முடியும்,” என்றார்.  “ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ரெட்டி கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்தமைக்காக கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வருமானம் மாதம் ரூ. 1 லட்சம் வரையில் இருக்கும். ரகுராணி ரெட்டி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணையானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது,”எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரெட்டிக்கு பினாமிகளின் வீடுகளிலும், அவருடைய உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது.

வெங்கட ரகுராணி ரெட்டியின் உறவினர் வெங்கட சிவபிரசாத் விஜயவாடா மாநகராட்சியில் நகர்புற வடிவமைப்பு திட்டமிடல் அதிகாரியாக உள்ளார். அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது. விஜயவாடாவில் சிவபிரசாத் வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் ராமாதேவி கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ. 19 கோடி அளவில் கிலோ கணக்கில் தங்கம், வைரம் வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

10 கிலோவிற்கு மேல் தங்கம் மற்றும் வைரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 25 கிலோ அளவில் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தில் 11 ஏக்கர் அளவில் மாங்காய் தோட்டம் உள்ளது. முழு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் மொத்த சொத்து மதிப்பு தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வெங்கட ரகுராணி ரெட்டியின் மனைவி காயத்திரியும் அவருடைய பினாமியாக செயல்பட்டு வந்து உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதிகாரிகள் சோதனை நடத்திய போது தங்க நகைகள், சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பினாமியாக செயல்பட்டவர்கள் பெயரில் பல்வேறு இடங்களில் பிளாட்கள் வாங்கப்பட்டு உள்ளது, வேல்பூரில் அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் பண்ணை நிலம் இருப்பதும் தெரியவந்து உள்ளது. வெங்கட ரகுராணியின் உறவினர்கள் 8 பேர் பினாமியாக சொத்துக்களை கொண்டு உள்ளனர் என்பதும் தெரியவந்து உள்ளது. சோதனை, பறிமுதல், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story