தாஜ்மகாலை பாதுகாக்கும் பொறுப்பு உத்தரபிரதேச அரசுக்கு உண்டு யோகி ஆதித்யநாத் பேட்டி


தாஜ்மகாலை பாதுகாக்கும் பொறுப்பு உத்தரபிரதேச அரசுக்கு உண்டு யோகி ஆதித்யநாத் பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2017 11:30 PM GMT (Updated: 17 Oct 2017 8:49 PM GMT)

தாஜ்மகால் வரலாற்று நினைவிடம் என்றும் அதை பாதுகாக்கும் பொறுப்பு உத்தரபிரதேச அரசுக்கு உண்டு எனவும் முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.

கோரக்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து அந்த மாநில அரசு அண்மையில் நீக்கியது.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் உத்தரபிரதேச பா.ஜனதா எம்.எல்.ஏ.வான சங்கீத் சோம் நேற்று முன்தினம் தாஜ்மகால் பற்றி குறிப்பிடுகையில், ‘‘தாஜ்மகாலுக்கு இந்திய வரலாற்றில் இடம் அளிக்கக் கூடாது. அது துரோகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றின் களங்கம்’’ என்று கூறி இருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை உருவாக்கிவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று கோரக்பூர் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:–

தாஜ்மகால் ஒரு வரலாற்று நினைவிடம். கட்டிடக்கலை தொழில்நுட்பத்தின் சான்றாக அது உலகம் முழுவதும் புகழ்பெற்றதாக திகழ்கிறது. அதனை பாதுகாக்கும் மற்றும் சுற்றுலாவுக்காக மேம்படுத்தும் பொறுப்பு உத்தரபிரதேச அரசுக்கு உண்டு.

தாஜ்மகாலை யார் கட்டினார்கள், எதற்காக அது கட்டப்பட்டது என்பதெல்லாம் பொருளற்ற வி‌ஷயங்கள். ஆனால் அது பாரத மாதாவின் மைந்தர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டப்பட்டது.

வருகிற 26–ந்தேதி தாஜ்மகாலுக்கு சென்று அங்கு நடக்கும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்வேன். ஆக்ராவில் உள்ள மற்ற வரலாற்று நினைவிடங்களையும் பார்வையிடுவேன். அந்த நகரில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பையும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதை உறுதி செய்வது மாநில அரசின் கடமை ஆகும்.

மாநிலத்தில் உள்ள ராணி லட்சுமிபாய் கோட்டை(ஜான்சி), சுனார் கோட்டை(மிர்சாபூர்), கலிஞ்சர் கோட்டை(பண்டா) ஆகிய இதர வரலாற்று சிறப்புமிக்க நினைவிடங்களையும் சுற்றுலாவின் வளர்ச்சிக்காக மாநில அரசு மேம்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story