உத்தரப்பிரதேச மாநில அரசின் 2018-ம் ஆண்டுக்கான காலண்டரில் தாஜ்மஹாலுக்கு இடம்


உத்தரப்பிரதேச மாநில அரசின் 2018-ம் ஆண்டுக்கான காலண்டரில் தாஜ்மஹாலுக்கு இடம்
x
தினத்தந்தி 19 Oct 2017 5:06 AM GMT (Updated: 19 Oct 2017 5:06 AM GMT)

உத்தரப் பிரதேச மாநில அரசின் 2018-ம் ஆண்டுக்கான காலண்டரில் தாஜ்மஹால் இடம்பிடித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் அடங்கிய பட்டியலை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் தாஜ்மஹால் இடம்பெறவில்லை என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் இரு தினங்களுக்கு முன்னர் கூறினார். அவரது கருத்து ஏற்படுத்திய சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே, இந்தியர்களின் ரத்தத்தாலும் வியர்வையினாலும் கட்டப்பட்டதுதான் தாஜ்மகால் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் 2018-ம் ஆண்டுக்கான காலண்டரில் தாஜ்மஹால் இடம்பிடித்துள்ளது. மாநில தகவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட இந்த காலண்டரில் ஜூலை மாதத்துக்கான பக்கத்தில் தாஜ்மஹால் இடம்பிடித்திருக்கிறது. தாஜ்மஹாலைத் தவிர கோரக்பூர் கோயிலும் இந்தக் காலண்டரில் இடம்பெற்றுள்ளது. கோரக்பூர் கோயில் மடத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story