ஒடிசாவில் தலை ஒட்டியிருந்த இரட்டையர்கள் பிரிப்பு : ஒரு குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்


ஒடிசாவில் தலை ஒட்டியிருந்த இரட்டையர்கள் பிரிப்பு : ஒரு குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்
x
தினத்தந்தி 28 Oct 2017 1:04 PM GMT (Updated: 2017-10-28T18:34:21+05:30)

தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார்.

புவனேசுவரம்,

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த 28 மாத இரட்டை குழந்தைகள் ஜெகா, காளியா. தலை ஒட்டிப்பிறந்த இந்த குழந்தைகளுக்கு கடந்த 25–ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் நீண்டநேர அறுவை சிகிச்சை நடந்தது. இருவரும் பிரிக்கப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேர டாக்டர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து ஒடிசா மாநில சுகாதார மந்திரி பிரதாப் ஜெனா கூறும்போது, 

‘‘ஜெகா கை, கால்களை அசைக்கத் தொடங்கியுள்ளான். அதோடு அவன் கண்களையும் திறந்தான். அவனது உடல்நிலை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்புகிறது. ஆனால் காளியாவின் உடல்நிலையில் அந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை. ஜெகநாதரின் கருணையால் ஒருசில நாட்களில் அவனது உடல்நிலையும் முன்னேறும் என நம்புகிறோம். ஆனாலும் அடுத்த 15 நாட்கள் அவர்களுக்கு முக்கியமானது’’ என்றார்.

Next Story