கேரளா ‘லவ் ஜிகாத்’ வழக்கு; ஹாதியாவை நவம்பர் 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர் படுத்துவேன் தந்தை பேட்டி


கேரளா ‘லவ் ஜிகாத்’ வழக்கு; ஹாதியாவை நவம்பர் 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர் படுத்துவேன் தந்தை பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2017 1:35 PM GMT (Updated: 30 Oct 2017 1:34 PM GMT)

கேரளா ‘லவ் ஜிகாத்’ வழக்கில் ஹாதியாவை நவம்பர் 27-ம் தேதி கோர்ட்டில் ஆஜர் படுத்துவேன் என அவருடைய தந்தை கூறிஉள்ளார்.


கோட்டயம்,
 
  
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசோகன் என்பவரது மகள் அகிலா என்கிற ஹாதியா என்பவரை மதம் மாற்றி ஷபின் ஜகான் என்பவர் திருமணம் செய்தார். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணியமர்த்த பெண் மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளார், ஜகான் ஒரு கைகூலி என குற்றம் சாட்டப்படுகிறது. இத்திருமணத்தை எதிர்த்து அசோகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு இந்த திருமணம் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்ததில் சந்தேகங்கள் உள்ளன. இதில் ‘லவ் ஜிகாத்’ சதி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறி திருமணத்தை ரத்து செய்தது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஷபின் ஜகான் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து ‌ஷபின் ஜகான் மேல்முறையீடு செய்தார்.
 பின்னர் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணைக்காக அவசியம் குறித்து கேள்வி எழுப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மதம் மாற்றி திருமணம் நடத்திய விவகாரம் குறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை அடுத்த மாதம் (நவம்பர்) 27–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த திருமணத்துக்கு முழுமனதுடன் அந்த பெண் ஒத்துக்கொண்டாரா? என்பது குறித்து நீதிபதிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்துவர் என தெரிகிறது. விசாரணையின் போது ஹாதியாவின் தந்தை தரப்பில் வீடியோ கேமராவின் வாயிலாக விசாரணையை முன்னெடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. 

இந்நிலையில் ஹாதியாவை நவம்பர் 27-ம் தேதி கோர்ட்டில் ஆஜர் படுத்துவேன் என அவருடைய தந்தை கூறிஉள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அசோகன், ஹாதியா வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். 

Next Story