அருணாசல நதி கருப்பு நிறமாகிவிட்டது, அதிகாரிகள் சீனாவை குற்றம் சாட்டுகின்றனர்


அருணாசல நதி கருப்பு நிறமாகிவிட்டது, அதிகாரிகள் சீனாவை குற்றம் சாட்டுகின்றனர்
x
தினத்தந்தி 29 Nov 2017 12:16 PM GMT (Updated: 29 Nov 2017 12:16 PM GMT)

அருணாசலப் பிரதேசத்தில் தெளிந்த நீரோடைபோல ஓடிய சியாங் நதியை மாசுபடுத்தியதாக சீனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திபெத் பீட பூமியில் உற்பத்தியாக இந்தியா வழியாக வங்கதேசத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கும் பிரமபுத்திராவின் முக்கிய கிளை நதி சியாங். சுமார் 230 கி.மீ நீளம் கொண்ட இந்த நதி, கிழக்கு சியாங் மாவட்டத்தில் பாசிகட் என்ற இடத்தில் பிரமபுத்திரா நதியில் இணைகிறது. அண்மையில், பிரம்மபுத்திரா நதியை சீனாவுக்குள் திருப்பும் வகையில் 1,000 கிலோமீட்டர் நீளத்துக்குச் சீனா சுரங்கம் வெட்டப்போவதாக செய்தி வெளியாகி, அதை சீனா மறுத்திருந்தது.

இந்த நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் தெளிந்த நீரோடைபோல ஓடிய சியாங் நதியை மாசுபடுத்தியதாக சீனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீனாவின் கிழக்கு சியாங் மாவட்டத்தில், இந்த நதியின் அடிப்பகுதியில் சிமெண்ட் கழிவுகள் பல கிலோமீட்டர் தொலைவுக்குப் பரவியுள்ளது. இதனால், நதிநீர் கறுப்பு நிறத்துக்கு மாறி, எதற்கும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. 

கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த நதியில் தொடர்ந்து மீன்களும் இறந்து வந்துள்ளன. பிரம்மபுத்திரா நதியும் கடந்த இரு மாதங்களாக நதி நீர் கருமையாக மாறியுள்ளது. மிகப்பெரிய அளவில் மண் தோண்டும் பணிகள் நடந்தால்தான் ஒரு நதியை இப்படி மாசு படுத்த முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து கிழக்கு சியாங் மாவட்ட அரசு அதிகாரி டம்யோ டலாக் கூறுகையில்:-

 ''மழைக்காலத்தில் நதியின் நீர் கருமை நிறத்துக்கு மாறுவதை இயல்பானதாகவே எடுத்துக்கொண்டோம். நவம்பர் மாதத்திலிருந்து நதி நீர் தெளிந்த நீரோடைபோல ஓடத்தொடங்கும். ஆனால், நதி நீரில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீர் தொடர்ந்து கறுப்பு நிறத்திலேயே ஓடியது. ஆய்வில் இறங்கியபோது, சிமெண்ட் போன்ற கலவைப் பூச்சுகள் நீரில் கலந்திருப்பது தெரியவந்தது.

 நீர் மாதிரி எடுக்கப்பட்டு மத்திய நீர் மேலாண்மை ஆணையத்துக்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நதிக்கு மேற்புறத்தில் சீனப்பகுதியில் பெரிய அளவில் மண் தோண்டும் பணிகளும் சிமென்ட் பூச்சும் வேலைகளும் நடந்ததால்தான் இந்த நதியில் நீர் கெட்டுப் பயனற்றுப் போனதாக சந்தேகிக்கிறோம்'' என்றார்.

Next Story