போபர்ஸ் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்


போபர்ஸ் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 2 Feb 2018 10:45 PM GMT (Updated: 2 Feb 2018 10:10 PM GMT)

போபர்ஸ் ஊழல் வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது.

புதுடெல்லி,

சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ராணுவத்துக்கு ரூ.1,437 கோடிக்கு போபர்ஸ் பீரங்கி வாங்குவதற்கு 1986-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் பெறுவதற்காக இந்திய அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 2005-ம் ஆண்டு மே மாதம் இதை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.சோதி சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்ததுடன், இங்கிலாந்தில் வசிக்கும் தொழில் அதிபர்களான இந்துஜா சகோதரர்கள் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில், போபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி, 2014-ம் ஆண்டு ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் சோனியா காந்திக்கு எதிராக பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்விகண்ட அஜய் அகர்வால் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருக்கவேண்டும். ஆனால் சி.பி.ஐ. அதைச் செய்யத் தவறி விட்டது என்று குறிப்பட்டு இருந்தார்.

இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில் நேற்று சி.பி.ஐ. தனது மனுவை தாக்கல் செய்தது.

அதில், போபர்ஸ் வழக்கு தொடர்பாக தங்களுக்கு சில முக்கியமான ஆவணங்களும், ஆதாரங்களும் கிடைத்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதனால் டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக போபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான ஆதரவை சி.பி.ஐ. வெளிப்படையாக தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story