ரூ.389 கோடி மோசடியில் ஈடுபட்ட இன்னொரு வைர வியாபாரி


ரூ.389 கோடி மோசடியில் ஈடுபட்ட இன்னொரு வைர வியாபாரி
x
தினத்தந்தி 24 Feb 2018 11:15 PM GMT (Updated: 24 Feb 2018 8:05 PM GMT)

ரூ.389 கோடி வங்கிக் கடன் மோசடியில் டெல்லியை சேர்ந்த ஒரு வைர வியாபாரி ஈடுபட்டுள்ளது தெரிய வந்து இருக்கிறது.

புதுடெல்லி,

சி.பி.ஐ.யிடம் வங்கி புகார் அளித்த 6 மாதத்துக்கு பின்பு  இது தொடர்பாக  இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரபல தொழில் அதிபர்கள் பொதுத்துறை வங்கிகளில் பெருமளவில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்வது நமது நாட்டில் தொடர் கதையாகி வருகிறது. முதலில் தொழில் அதிபர் விஜய் மல்லையா ரூ.9 ஆயிரம் கோடி மோசடி புகாரில் சிக்கி தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அண்மையில் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிவிட்டார்.

இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ரோட்டோமேக் பேனா தொழிற்சாலையின் அதிபர் விக்ரம் கோத்தாரி, பாங்க் ஆப் பரோடா உள்பட 7 பொதுத்துறை வங்கிகளில் ரூ.3,695 கோடி கடன் வாங்கி அதைச் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் சி.பி.ஐ.யால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நிரவ் மோடி போல இன்னொரு வைர வியாபாரியும் அவருடைய நிறுவனமும், வங்கியில் ரூ.389.85 கோடி வாங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

டெல்லி கரோல் பாக் பகுதியில் துவாரகாதாஸ் சேத் என்னும் சர்வதேச நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக வைரம், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சப்யா சேத் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பொதுத்துறை வங்கியான ‘ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்’ சி.பி.ஐ. யிடம் ஒரு புகாரை அளித்தது.

அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–

துவாரகாதாஸ் சேத் நிறுவனம் தங்களுக்கு வெளிநாடுகளில் வைரம் மற்றும் தங்க ஆபரண விற்பனை மூலம் கணிசமான வருவாய் இருப்பதாக கூறி எங்கள் வங்கியில் 2007–2012–ம் ஆண்டுகளுக்கு இடையே ரூ.389.85 கோடி கடன் வாங்கியது. ஆனால் அந்த பணத்தை இதுவரை திரும்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது. இந்த கடன் தற்போது வங்கியின் வாராக்கடன் பட்டியிலில் உள்ளது.

வெளிநாடுகளில் இல்லாத நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் தங்களுக்கு பெரும் அளவில் பணம் கையிருப்பில் உள்ளதாக போலி ஆவணங்களை காண்பித்தும் வங்கியை ஏமாற்றும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எங்களது வங்கி அதிகாரிகளின் விசாரணையில் இந்த மோசடி தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சப்யாசேத் வெளிநாடு தப்பிச் செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குனர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரை நிரவ்மோடி, விக்ரம் கோத்தாரி ஆகியோரின் வங்கிக் கடன் விவகாரம் விசுவரூபம் எடுத்த பிறகு தற்போது சி.பி.ஐ. கையில் எடுத்து இருக்கிறது.

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் அளித்த புகாரின் பேரில், துவாரகாதாஸ் சேத் நிறுவனத்தின் இயக்குனர்கள் சப்யா சேத், ரீத்தா சேத், கிருஷ்ணகுமார் சிங், ரவி சிங் மற்றும் துவாரகாதாஸ் சேத் சர்வதேச நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

Next Story