அதிகாரிகளுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவுரை


அதிகாரிகளுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவுரை
x
தினத்தந்தி 25 Feb 2018 12:00 AM GMT (Updated: 24 Feb 2018 8:20 PM GMT)

வங்கி மோசடிகளை முளையிலேயே கிள்ளி எறிந்து, மீண்டும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவுரை வழங்கினார்.

புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் இருந்து மோசடியாக கடனுறுதிக் கடிதம் பெற்று வெளிநாடுகளில் இருந்து ரூ.11 ஆயிரத்து 700 கோடி கடன் திரட்டி ஊழல் செய்து உள்ளார்.

அவரைத் தொடர்ந்து ரோட்டாமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி, 7 பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.2,919 கோடி கடன்கள் வாங்கி, அவை இப்போது வட்டியுடன் சேர்த்து ரூ.3,695 கோடியாக உயர்ந்து உள்ளது. ஆனால் அவர் இந்த தொகையை வேண்டும் என்றே செலுத்தவில்லை.

இப்படி வங்கி மோசடிகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிற நிலையில், டெல்லியில் நேற்று நடந்த உலகளாவிய தொழில் அதிபர்கள் மாநாட்டில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

வங்கித்துறையில் கடன் மோசடிகள் வெளிப்படாமல் போய் விட்டன என்பது உண்மை. யாரும் அதற்கு சிவப்புக்கொடி உயர்த்த வில்லை என்பது கவலை அளிக்கக்கூடியது ஆகும்.

வங்கிகளில் கடன்களை வாங்கி விட்டு வேண்டும் என்றே திருப்பி செலுத்தாமல் ஏமாற்றுபவர்கள் பொருளாதாரத்தின் வடுக்களாக அமைகின்றனர். இது, இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

இந்தியாவில் இதைப்போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், அது தொழில் தொடங்குவதை  எளிதாக்க வேண்டும் என்பதற்கான முழு முயற்சியை பின்னுக்குத் தள்ளிவிடும். பொருளாதாரத்தில் இந்த வடுக்கள் முன்னணி இடத்தைப் பிடித்து விடுகின்றனர்.

கடன்களைப் பொறுத்தமட்டில் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. அவர்கள்தான் கடனுக்கான விதிமுறைகளை இறுதியில் முடிவு செய்கிறார்கள். அவர்கள் எப்போதும் 3–வது கண்ணை வைத்திருக்க வேண்டும். அந்தக் கண், எப்போதும் திறந்து இருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக இந்திய அமைப்பில், கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு பதிலாக அரசியல்வாதிகள் பொறுப்பு ஏற்க வைக்கப்படுகிறார்கள்.

முறைகேடுகளை கண்டறிவதில் எந்த புதிய முறையைக் கொண்டு வரலாம் என்பதை மேற்பார்வை செய்கிற இடத்தில் உள்ள அமைப்புகள் தீர்மானிக்க வேண்டும். தவறான நிகழ்வுகள் (வங்கி மோசடிகள்) முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அவை மீண்டும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story