10-வது நாளாக மக்களவையில் தொடர் அமளி, அவை நடவடிக்கைகள் பாதிப்பு


10-வது நாளாக மக்களவையில் தொடர் அமளி,  அவை நடவடிக்கைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 16 March 2018 6:43 AM GMT (Updated: 16 March 2018 6:43 AM GMT)

10-வது நாளாக மக்களவையில் தொடர் அமளி நீடித்ததால் பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. #LokSabha

புதுடெல்லி,

பாராளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 5 ஆம் தேதி துவங்கியது. அன்றைய தினத்தில் இருந்து காவிரி விவகாரம், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களை மையப்படுத்தி அதிமுக, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக, பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கியுள்ளன. 

எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே, நேற்று  பணிக்கொடை செலுத்துதல் திருத்த மசோதா, குறிப்பிட்ட நிவாரண திருத்த மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இரு மசோதாக்களும் எந்த விதமான விவாதமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியதாக அவைத்தலைவர் மகாஜன் அறிவித்தார். 

இந்த நிலையில், இன்று காலை பாரளுமன்றம் கூடியதும் இதே நிலை நீடித்தது. மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேள்வி நேரம் துவங்குவதாக அறிவித்ததும், மேற்கூறிய கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளையும் கையில் ஏந்திய படி அமளியில் ஈடுபட்டனர். சமாஜ்வாடி மற்றும் இடது சாரி கட்சிகளின் எம்.பிக்கள் தங்கள் இருக்கைகளிலே எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவையில் அமளி நீடித்ததால், நண்பகல் வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. 

முன்னதாக,  இன்று காலை அண்மையில் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களான சர்பாஸ் அலம் (அரரியா-பீகார்), சமாஜ்வடி கட்சியைச்சேர்ந்த நாகேந்திர பிரதாப் சிங் படேல் (புல்பூர்), பிரவீன் குமார் நிஷாத் (கோரக்பூர்) ஆகியோர் எம்.பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர். 


Next Story