தேசிய செய்திகள்

முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு; மக்களின் மனநிலை மாறவில்லை என்பதை காட்டுகிறது நிர்பயாவின் தாயார் + "||" + Ex-Karnataka DGP HT Sangliana receives public ire for comment on Delhi gangrape victim s mother good physique

முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு; மக்களின் மனநிலை மாறவில்லை என்பதை காட்டுகிறது நிர்பயாவின் தாயார்

முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு; மக்களின் மனநிலை மாறவில்லை என்பதை காட்டுகிறது நிர்பயாவின் தாயார்
உடலமைப்பு குறித்து முன்னாள் டிஜிபியின் சர்ச்சை பேச்சு மக்களின் மனநிலை மாறவில்லை என்பதை காட்டுகிறது என நிர்பயாவின் தாயார் கூறிஉள்ளார். #Sangliana

புதுடெல்லி,

பெங்களூருவில் சமுதாயத்தில் சாதனை படைத்த பெண்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 

விழாவில், டெல்லியில் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவிக்கு, அவர் ஆற்றிய பணிகளுக்காக விருது வழங்கப்பட்டது. அதேபோல, பரப்பன அக்ரஹார சிறை அதிகாரியாக இருந்த ரூபாவிற்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு விருது வழங்கிய கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி சங்லியானா, ‘நிர்பயாவின் தாயாரைப் பார்க்கிறேன். அவருக்கே இவ்வளவு அழகான உடற்கட்டு இருக்கும்போது, நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன்’ என அனைவரும் முகம்சுழிக்கும் விதமாக பேசினார். 

மேலும், ‘பாலியல் வன்முறையில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல், பின்னர் வழக்கு தொடரவேண்டும். இதன்மூலம் கொல்லப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்’ என சர்ச்சைக்குரிய கருத்தையும் பதிவுசெய்தார். சங்கியானாவின்  இக்கருத்து விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருடைய பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அமைப்பினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் உடலமைப்பு குறித்து முன்னாள் டிஜிபியின் சர்ச்சை பேச்சு மக்களின் மனநிலை மாறவில்லை என்பதை காட்டுகிறது என ஆஷா தேவி கூறிஉள்ளார். 
 
ஆஷா தேவி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசுகையில், “தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிப்பதைவிட அவர் எங்களுடைய போராட்டம் குறித்து ஏதாவது பேசியிருந்தால் சிறப்பானதாக இருந்து இருக்கும். அவருடைய பேச்சு, நம்முடைய சமூகத்தில் மக்களின் மனநிலை மாறவில்லை என்பதையே காட்டுகிறது,” என வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.