குரங்கணி காட்டுத் தீ குறித்து இருமுறை எச்சரிக்கை விடுத்தோம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்


குரங்கணி காட்டுத் தீ குறித்து இருமுறை எச்சரிக்கை விடுத்தோம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 19 March 2018 9:16 AM GMT (Updated: 19 March 2018 9:16 AM GMT)

குரங்கணி காட்டுத் தீ குறித்து இருமுறை எச்சரிக்கை விடுத்தோம் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. #KuranganiForestFire


புதுடெல்லி,

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர்.  வனப்பகுதியில் சிக்கியவர்களில் 27 பேர் மீட்கப்பட்டனர். இதில், 17 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையின் அனுமதியை பெறவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்த சென்னை நிறுவனம் நாங்கள் அனுமதி பெற்றுதான் சென்றோம் என்றது.  

இதற்கிடையே குரங்கணி காட்டுத் தீ குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் இருந்து எந்தஒரு எச்சரிக்கையும் விடப்படவில்லை எனவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

இப்போது இதனை மறுத்து உள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், குரங்கணி காட்டுத் தீ குறித்து இருமுறை எச்சரிக்கை விடுத்தோம் என குறிப்பிட்டு உள்ளது.

காடுகள் மற்றும் சிறப்பு செயலாளர் சித்தந்தா தாஸ் கூறுகையில், மத்திய அமைச்சகத்திடம் இருந்து அனுப்பப்பட்ட எச்சரிக்கை செய்தி மாநில  வனத்துறைக்கு சரியாக சென்றடைந்ததா என்பதை என்னால் உறுதி செய்ய முடியாது. எங்கிருந்து எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டதோ அந்த துறை சேர்ந்த அதிகாரிகளை கேட்டபின்னரே அதுபற்றி கூறமுடியும் என கூறிஉள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அறிக்கையில், காட்டுத் தீ தொடர்பாக நாங்கள் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளுக்கு மார்ச் 11-ம் தேதி மதியம் 2.29 மணிக்கும், 3.37 மணிக்கும் இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
எம்ஓடிஐஎஸ் மற்றும் எஸ்என்பிபி ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களின் மூலம் கிடைக்கும் தகவல்கள் ஐதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்ஸிங் மையத்தில் (என்ஆர்எஸ்சி) இருந்து எங்களுக்கு எச்சரிக்கை செய்தி கிடைத்ததும், அதுதொடர்பாக தமிழக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் அனுப்பட்டது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காட்டுத் தீ குறித்து தகவல் கிடைத்ததும் அந்தந்த மாநிலங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக புகைப்படங்கள் மற்றும் எச்சரிக்கை அனுப்புவது வழக்கமான நடவடிக்கையாக இது இருந்து வருகிறது. காட்டுத் தீ ஏற்படும் போது அவ்வப்போது மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படும். 

குரங்கணியில் தீ விபத்து நேரிட்ட அன்று 11-ம் தேதியும் எச்சரிகையுடன் இரு மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story