ஐஎன்எஸ் அரிஹந்த் சேதம்? பாதுகாப்பாது தொடர்பான தகவலை தெரிவிக்க முடியாது - மத்திய அரசு


ஐஎன்எஸ் அரிஹந்த் சேதம்? பாதுகாப்பாது தொடர்பான தகவலை தெரிவிக்க முடியாது - மத்திய அரசு
x
தினத்தந்தி 21 March 2018 1:27 PM GMT (Updated: 21 March 2018 1:27 PM GMT)

ஐஎன்எஸ் அரிஹந்த் சேதம் அடைந்துவிட்டதா என்பதில் பாதுகாப்பு தொடர்பான தகவலை தெரிவிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்டது. #INSArihant

புதுடெல்லி,

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்திய கடற்படையின் முதலாவது அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த்.

ஐஎன்எஸ் அரிஹந்த் கப்பல் அணு ஆயுத ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டது. நிலம், வான்வெளி, கடல் என 3 வழிகளிலும் எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து அணுஆயுதங்களை வீசும் வல்லமை பெற்றது. விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசின் எச்.எஸ்.எல். கப்பல் கட்டுமான தளத்தில் அரிஹந்த் கப்பல் வடிவமைக்கப்பட்டது. இது ரஷ்யாவின் அகுலா-1 ரக நீர்மூழ்கி கப்பல் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டது. கடந்த 2016 ஆகஸ்டில் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் கடற்படை சேவையில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் ஐஎன்எஸ் அரிஹந்த் சேதம் அடைந்து உள்ளதாக செய்தி மீடியாக்களில் வெளியாகியது.

2017-ம் ஆண்டில் நடைபெற்ற ஏதோ ஒரு விபத்தில் ஐஎன்எஸ் அரிஹந்த் சேதம் அடைந்தது என மீடியா தகவல்கள் வெளியாகியது. விபத்தை அடுத்து கப்பலின் செயல்பாடு முடங்கியது எனவும் தெரியவந்தது. 10 மாதங்களாக ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலால் கரையை அடைய முடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பலின் உந்துவிசை அறைக்குள் நீர் சென்றுவிட்டது எனவும், இதனால் சேதம் அடைந்துவிட்டது எனவும் கூறப்படுகிறது. மனித தவறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டது என கடற்படை தகவல்கள் தெரிவிப்பதாக தி இந்து செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. 

இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், பதில் தெரிவிக்கப்படவில்லை எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கப்பல் விபத்தில் சிக்கியதில் இருந்து அதனை சரிசெய்யும் நடவடிக்கை நடக்கிறது, சுத்தப்படுத்தும் பணியும் நடக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பாதுகாப்பு தொடர்பானது

பத்திரிக்கை செய்தியை குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது பாதுகாப்பு தொடர்பான தகவலை தெரிவிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்டது. 

மக்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. பிவி மிதுன் ரெட்டி நீர்மூழ்கி கப்பல் தொடர்பாக கேள்வியை மத்திய அரசுக்கு எழுப்பினார். “ஐஎன்எஸ் அரிஹந்த் மிகப்பெரிய சேதத்தை அடைந்து உள்ளது; அப்படியானால், அதன் விவரங்கள்; உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பலால் கடந்த சில மாதங்களாக கரையை அடைய முடியவில்லை என்றால், அதுபற்றிய விரிவான விளக்கம் என்ன? என மத்திய அரசிடம் விளக்கம் கோரினார் பிவி மிதுன் ரெட்டி. ஆனால் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் விரிவான தகவலை தெரிவிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்டது.

பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரோவ் பதில் அளிக்கையில், “தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்பதால் இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான தகவலை அவையில் வெளிப்படுத்த முடியாது,” என கூறிவிட்டார். 

Next Story