கத்துவா வழக்கில் சிறுமிக்காக ஆஜராக உள்ள வக்கீலுக்கு கொலை மிரட்டல்


கத்துவா வழக்கில் சிறுமிக்காக ஆஜராக உள்ள வக்கீலுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 16 April 2018 3:02 AM GMT (Updated: 16 April 2018 3:02 AM GMT)

கத்துவா வழக்கில் சிறுமிக்காக ஆஜராக உள்ள வக்கீல் தீபிகா சிங் ராஜாவாட் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். #KathuaCase

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்துகொண்டனர். 

இதற்கிடையே, அந்த பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மந்திரிகள் சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக காஷ்மீர் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி தெரிவித்தார். 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுமி தரப்பில் வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜாவாட் என்பவர் ஆஜராக உள்ளார் . இந்த வழக்கில் தான் ஆஜராவதைப் பலர் விரும்பவில்லை என்றும் ஜம்மு -காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பூபிந்தர்சிங் சலாதியா நான் ஆஜராவதைத் தடுக்க முயன்று வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார். 

செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தீபிகா சிங் ராஜாவாட் மேலும் கூறியதாவது:- “இந்த வழக்கை விசாரிக்கும் நான் தனிமைப்படுத்தப் படுகிறேன். நான் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம். கொலையும் செய்யப்படலாம். நான் ஆபத்தில் இருப்பது பற்றி  சுப்ரிம் கோர்ட்டில் முறையீடு செய்யப் போகிறேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன்” என தெரிவித்துள்ளார்.

Next Story