சரக்கு, சேவை வரியை நிர்வகிக்கும் ‘ஜி.எஸ்.டி.என்.’ அரசு நிறுவனம் ஆகிறது


சரக்கு, சேவை வரியை நிர்வகிக்கும் ‘ஜி.எஸ்.டி.என்.’ அரசு நிறுவனம் ஆகிறது
x
தினத்தந்தி 4 May 2018 11:45 PM GMT (Updated: 4 May 2018 8:39 PM GMT)

மத்திய மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரியை நிர்வகிக்கும் ஜி.எஸ்.டி.என். நிறுவனத்தை முழுக்க முழுக்க அரசு நிறுவனம் ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. #GST #ArunJaitley

புதுடெல்லி,

நாட்டில் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) கொண்டு வந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது.

ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அங்கம் வகிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 27-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஜி.எஸ்.டி. தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கம்பெனிகள் சட்டத்தின் கீழ் ‘ஜி.எஸ்.டி.என்.’ (ஜி.எஸ்.டி.நெட்வொர்க்) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. லாப நோக்கம் அல்லாமல் தனியார் நிறுவனமாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. வரி கணக்கு பதிவு, வரி செலுத்தும் பணி, கணக்கு தாக்கல், கூடுதல் வரி தொகையை திருப்பி அளித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

இந்த ஜி.எஸ்.டி.என். நிறுவனத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு தலா 24.5 சதவீதமாகவும், மீதம் உள்ள 51 சதவீத பங்கு பிற தனியார் நிறுவனங்களின் (வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்) பங்காகவும் இருந்தது. என்றாலும் இந்த நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில், ஜி.எஸ்.டி.என். நிறுவனத்தில் தனியாருக்கு உள்ள 51 சதவீத பங்குகளையும் அரசாங்கமே வாங்கி, இந்த நிறுவனத்தை முழுக்க முழுக்க அரசு நிறுவனமாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. என்றாலும் ஜி.எஸ்.டி.என். நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களை ஏற்கனவே உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பணியாற்ற அனுமதிப்பது என்றும், மேலும் ஊழியர்கள் தேவைப்பட்டால் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தகவலை கூட்டம் முடிந்ததும் நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.

சர்க்கரையின் மீது கூடுதல் வரி விதிப்பது பற்றிய முடிவு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும், கொள்முதலுக்கான தொகையை மின்னணு முறையிலும், காசோலை மூலமாகவும் செலுத்தும் நுகர்வோருக்கு 2 சதவீதம் ஊக்கத்தொகை (அதிகபட்சமாக ரூ.100) அளிக்கும் திட்டத்துக்கு பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

சில விதிவிலக்குகள் தவிர, ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வோர் அனைவரும் மாதம் ஒரு முறை கணக்கு தாக்கல் செய்யும் புதிய முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழ்நாடு முன்வைத்து நிலுவையில் உள்ள வரிக்குறைப்பு மற்றும் வரிவிலக்கு தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து முடிவு எடுக்கும்படி வலியுறுத்தியதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது. 

Next Story