குட்கா ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு 14-ந் தேதி விசாரணை


குட்கா ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு 14-ந் தேதி விசாரணை
x
தினத்தந்தி 10 May 2018 10:15 PM GMT (Updated: 10 May 2018 8:15 PM GMT)

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு 14-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி, 

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய அனுமதித்ததாகவும், இதற்காக கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக பெற்றதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மாநில அரசில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு தி.மு.க.வை சேர்ந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 26-ந் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கூடாது என்று அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு, சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் சார்பில் நேற்று ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனுவை 14-ந் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

இதற்கிடையே குட்கா ஊழல் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் அந்த விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story