தேசிய செய்திகள்

நீதிபதி கே.எம். ஜோசப் விவகாரம்: கொலீஜியம் இன்று கூடுகிறது + "||" + Crucial Meeting Of Top Judges Today On Justice Joseph Elevation

நீதிபதி கே.எம். ஜோசப் விவகாரம்: கொலீஜியம் இன்று கூடுகிறது

நீதிபதி கே.எம். ஜோசப் விவகாரம்: கொலீஜியம் இன்று கூடுகிறது
நீதிபதி கே.எம். ஜோசப் விவகாரம் தொடர்பாக கொலீஜியம் குழு இன்று கூட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #SupremeCourt
புதுடெல்லி,

உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், மூத்த பெண் வக்கீல் இந்து மல்கோத்ரா ஆகிய 2 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகளை கொண்ட குழு (‘கொலிஜியம்’) மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி பரிந்துரை செய்தது.

ஆனால் பெண் வக்கீல் இந்து மல்கோத்ரா மீதான பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, கே.எம். ஜோசப் மீதான பரிந்துரையை ஏற்காமல், சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியத்தின் மறுபரிசீலனைக்கு கடந்த 26-ந் தேதி திருப்பி அனுப்பியது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அகில இந்திய அளவில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலில் கே.எம். ஜோசப்பின் பெயர் 45-வது இடத்தில்தான் உள்ளது, தவிரவும் கேரளாவுக்கு போதுமான பிரதிநிதித்துவம் உயர்நீதித்துறையில் அளிக்கப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களை சொல்லி மத்திய அரசு நியாயப்படுத்தியது.

ஆனால், உத்தரகண்டில் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல்படுத்தப்பட்ட  ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரது பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கொலீஜியம் குழுவில் உள்ள நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்தச் சூழலில், கொலீஜியம் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 11) நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் வரும் ஜூன் 22-ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். எனவே, அதற்கு முன்பு கொலீஜியம் கூட்டம் நடைபெற வேண்டும் என்று அவர் விரும்புவதாகத் தெரிகிறது. கொலீஜியம் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இன்று பிற்பகல் 1 மணியளவில் கொலீஜியம் அல்லது மூத்த நீதிபதிகள் 5 பேர் அடங்கிய குழு கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.