சில காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சி எம் எல் ஏக்களின் ஆதரவை பெற்றுள்ளோம்: பாஜக கட்சியின் கே எஸ் ஈஸ்வரப்பா பேட்டி


சில காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சி எம் எல் ஏக்களின் ஆதரவை பெற்றுள்ளோம்: பாஜக கட்சியின் கே எஸ் ஈஸ்வரப்பா பேட்டி
x
தினத்தந்தி 16 May 2018 6:09 AM GMT (Updated: 16 May 2018 6:09 AM GMT)

சில காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக்கட்சி எம் எல் ஏக்களின் ஆதரவை பெற்றுள்ளோம் என பாஜக கட்சியின் மூத்த தலைவர் கே எஸ் ஈஸ்வரப்பா கூறியுள்ளார். #KSEshwarappa

பெங்களூரு,

224 தொகுதிகள் அடங்கிய கர்நாடக மாநிலத்தில், 222 தொகுதிகளில் சட்டசபைத்தேர்தல் நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணிக்கையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், பகல் நேர நிலவரப்படி பாஜக கட்சி முன்னேறி வந்தது. இந்நிலையில் திடீரென பா.ஜனதாவின் முன்னணி நிலவரம் குறையத் தொடங்கியது. இறுதியில் தொங்கு சட்டசபை அமைந்தது. 104 இடங்களைக் கைப்பற்றி, பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வந்தது.

காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா, குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளக்கட்சியின் கீழ் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கிறது எனக் கூறினார். 

அதே நேரத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள பா.ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில் ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக கட்சியின் மூத்த தலைவர் கே எஸ் ஈஸ்வரப்பா ஏ என் ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,

”பெரும்பான்மையை நிரூபித்து கர்நாடகத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சிகள் திடீரென இணைந்துள்ளதால் இரு கட்சியைச் சேர்ந்த எம் எல் ஏக்கள் கோபத்தில் உள்ளனர். மேலும் மிகுந்த அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சி எம் எல் ஏக்கள் பாஜக கட்சிக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் 100 சதவீதம் எங்கள் கட்சியே ஆட்சி பொறுப்பேற்கும். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. நேற்று சட்டசபை தேர்தல் முடிவு மட்டுமே வந்துள்ளது. பொறுத்திருந்து பாருங்கள். விரைவில் பெரும்பான்மையை நிரூபித்து கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியை அமைப்போம்” எனக் கூறியுள்ளார்.

Next Story