காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்


காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்
x
தினத்தந்தி 17 May 2018 7:43 AM GMT (Updated: 17 May 2018 8:08 AM GMT)

காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்து உள்ளது. #CauveryIssue

புதுடெல்லி

கர்நாடக சட்டசபை தேர்தலை காரணமாக கூறி, வரைவு செயல்திட்டத்தை தாமதப்படுத்திய மத்திய அரசு நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை அதை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. பின்னர் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு நேற்று  நடைபெற்றது.

 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. 

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தரப்பில், மத்திய அரசின் வரைவு செயல்திட்டம் குறித்த கருத்துகள் அடங்கிய அறிக்கைகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

சில  பிரிவுகளில் திருத்தங்களை செய்து, புதிய வரைவு அறிக்கையை இன்று  கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு  நேற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து அமைப்பின் பெயர், அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படும் இடம் மற்றும் முடிவை செயல்படுத்துவதில் அமைப்புக்கு இருக்கும் அதிகாரம் ஆகிய பிரிவுகளில் திருத்தங்களை செய்து, புதிய வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் திருத்தப்பட்ட  வரைவு திட்டத்தை  தாக்கல் செய்தார்.

மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை, மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில்  தலையிடுவதாக உள்ளது என  உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் 2 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் சூட்ட  வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

காவிரி வழக்கில்  திருத்தப்பட்ட வரைவுதிட்டம் மீதான தீர்ப்பு நாளை மாலை வழங்கப்படுகிறது.  நாளை தீர்ப்பு வழங்காவிடில் மே 22, 23 ந்தேதிகளில் தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

Next Story