மத்திய அரசு எம்.எல்.ஏ.க்களை மிரட்ட அமலாக்கப்பிரிவை தவறாக பயன்படுத்துகிறது குமாரசாமி குற்றச்சாட்டு


மத்திய அரசு எம்.எல்.ஏ.க்களை மிரட்ட அமலாக்கப்பிரிவை தவறாக பயன்படுத்துகிறது குமாரசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 May 2018 10:48 AM GMT (Updated: 17 May 2018 10:48 AM GMT)

மத்திய அரசு எம்.எல்.ஏ.க்களை மிரட்ட அமலாக்கப்பிரிவை தவறாக பயன்படுத்துகிறது என குமாரசாமி குற்றம் சாட்டிஉள்ளார். #Kumaraswamy


பெங்களூரு,

கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பா.ஜனதா ஆட்சி அமைத்து உள்ளது. காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் விபரங்களை தாக்கல் செய்த நிலையிலும் ஆளுநர் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைதது சர்ச்சையாகியது. 

இதற்கிடையே எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாரதீய ஜனதா முயற்சி செய்து வருகிறது என காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் குற்றம் சாட்டி வருகிறது. பா.ஜனதா ஆட்சியமைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். 

குமாராசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் வஜுபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தது அரசியலமைப்பிற்கு எதிரானது. மத்திய அரசு எப்படி இப்படி செயல்படுகிறது? மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு தேசத்தில் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாத பாரதீய ஜனதாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் என்பது தேசத்தில் இதுவே முதல்முறையாகும். 15 நாட்கள் அவகாசம் என்பது குதிரை பேரத்திற்கா? மத்தியில் உள்ள மோடி அரசு அனைத்து விசாரணை முகமைகளையும் தவறாக பயன்படுத்துகிறது. அவர்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு நெருக்கடி கொடுக்கவும், அவர்களை மிரட்டவும் மத்திய முகமைகளை பயன்படுத்துகிறார்கள், என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங், அக்கட்சியின் தொடர்பில் இருந்து விலகிவிட்டதாகவும், பாரதீய ஜனதாவுடன் மீண்டும் இணையலாம் என தகவல் வெளியாகி உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய குமாரசாமி, அவருக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அமலாக்கப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஆனந்த் சிங்கிடம் நான் பேசினேன். அவருடைய பிரச்சனையை என்னிடம் எடுத்துக் கூறினார். எனக்கு அதுதொடர்பான தகவல்களை தெரிவித்து உள்ளார், பிரச்சனையை முன்னெடுக்கவும் கேட்டுக்கொண்டு உள்ளார் என பதிலளித்தார். 

தேசத்தில் ஜனநாயகத்தை அழிக்க துடிக்கும் பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தந்தை தேவேகவுடா முன்னெடுக்க கோரிக்கையும் விடுத்து உள்ளார் குமாரசாமி.

Next Story