வெனிசுலா நாட்டு அதிபர் தேர்தலில் நிகோலஸ் மெஜுரோ வெற்றி பெற்றார்


வெனிசுலா நாட்டு அதிபர் தேர்தலில் நிகோலஸ் மெஜுரோ வெற்றி பெற்றார்
x
தினத்தந்தி 21 May 2018 5:58 AM GMT (Updated: 21 May 2018 5:58 AM GMT)

வெனிசுலா நாட்டு அதிபர் தேர்தலில் நிகோலஸ் மெஜுரோ வெற்றி பெற்றுள்ளார்.

காரகாஸ்,

வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்து வருபவர் நிகோலஸ் மெஜுரோ (வயது 55).  முன்னாள் பேருந்து ஓட்டுநர் மற்றும் யூனியன் தலைவராக இருந்த நிகோலஸ் பின்னர் அரசியலில் நுழைந்து அந்நாட்டின் அதிபர் ஹியுகோ தலைமையிலான அமைச்சரவையில் வெளிவிவகார துறை மந்திரியாக இருந்துள்ளார்.  வெனிசுலா துணை குடியரசு தலைவராகவும் இருந்துள்ளார்.

வெனிசுலா நாடு எண்ணெய் வளம் நிறைந்தது.  இங்கு எண்ணெய் உற்பத்தியால் அதன் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது.  அதிபர் பதவியில் இருந்த ஹியுகோ சாவேஸ் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த பின்னர் அவரது அரசியல் வாரிசான நிகோலஸ் அதிபராக பொறுப்பேற்று கொண்டார்.

அதன்பின் நாட்டில் ஏற்பட்ட உணவு, மருந்து பற்றாக்குறை, குற்றங்களின் எண்ணிக்கை உயர்வு, நீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளின் பயன்பாடு போதிய அளவில் இல்லாமை ஆகியவற்றால் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.  இதனால் நிகோலசிற்கு 75 சதவீத எதிர்ப்பு அலையே வீசியது.

சமீப வருடங்களில் ஆயிரக்கணக்கான வெனிசுலாவாசிகள் நாட்டில் இருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், அங்கு அதிபருக்கான தேர்தல் நடந்தது.  இதில், நிகோலஸ் மற்றும் ஹென்றி பால்கன் ஆகியோர் இடையே கடும் போட்டி இருந்து வந்தது.  56 வயது நிறைந்த ஹென்றி முன்னாள் ராணுவ அதிகாரியாவார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த அந்நாட்டில் 46 சதவீதம் அளவிற்கே வாக்கு பதிவாகி இருந்தது.

இந்த தேர்தல் நடைமுறையை, முறையானது மற்றும் உண்மையானது என நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பே செய்தியாளர்கள் சந்திப்பில் ஹென்றி கூறினார்.

எனினும் தேர்தல் முடிவில் நிகோலஸ் 67.7 சதவீத வாக்குகளும், 2வது இடத்தில் ஹென்றி 21.2 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர்.  இதனால் நிகோலஸ் 2வது முறையாக அதிபர் பதவியை ஏற்கிறார்.


Next Story