பட்டிவீரன்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி: தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்


பட்டிவீரன்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி: தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:30 PM GMT (Updated: 9 Jun 2018 9:33 PM GMT)

பட்டிவீரன்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 42). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் சித்தரேவு அருகே உள்ளது. இவரது தோட்டத்தில் சுமார் 80 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் பாதி வரை படிகள் உள்ளன. தற்போது வறட்சி காரணமாக கிணற்றில் 10 அடி வரையே தண்ணீர் இருக்கிறது.

நேற்று கிணற்றில் உள்ள மோட்டாரை பழுது பார்ப்பதற்காக சின்னசாமி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து தோட்டத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அப்போது கிணற்றுக்குள் சின்னசாமி உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் சுப்பையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி கயிறு கட்டி சின்னசாமியை மீட்டனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story