‘அடல் பென்சன் யோஜ்னா’ திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயருகிறது


‘அடல் பென்சன் யோஜ்னா’ திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயருகிறது
x
தினத்தந்தி 12 Jun 2018 11:30 PM GMT (Updated: 12 Jun 2018 8:57 PM GMT)

‘அடல் பென்சன் யோஜ்னா’ திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் ‘அடல் பென்சன் யோஜ்னா’ திட்டத்தில் சந்தாதாராக இணையும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு 60 வயதுக்கு பின்பு 5 அடுக்குகளில் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.5 ஆயிரம் வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டம் 2015–ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது 1.02 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.

பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகை போதுமானதாக இருக்காது என்பதால் இது குறித்து பரிசீலனை செய்யும்படி மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதுபற்றி ஓய்வூதிய நிதி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பெட்ரா) தலைவர் ஹேமந்த் ஜி.கான்டிராக்டர் கூறுகையில், ‘‘அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான பரிந்துரையை நிதி அமைச்சசத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்’’ என்றார்.

இதேபோல் ‘அடல் பென்சன் யோஜ்னா’ திட்டத்திற்கான வயது வரம்பை 18–ல் இருந்து 50 ஆக உயர்த்தவும் பெட்ரா பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை மத்திய நிதிச்சேவை இலாகாவின் இணைச் செயலாளர் மாதேஷ் குமார் மிஸ்ராவும் டெல்லியில் நேற்று உறுதி செய்தார்.


Next Story