அரசு பங்களா சேதப்படுத்தப்பட்ட விவகாரம் ‘பா.ஜனதாவின் சதி’ அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு


அரசு பங்களா சேதப்படுத்தப்பட்ட விவகாரம் ‘பா.ஜனதாவின் சதி’ அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Jun 2018 11:11 AM GMT (Updated: 13 Jun 2018 11:11 AM GMT)

உத்தரபிரதேசத்தில் அரசு பங்களா சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் ‘பா.ஜனதாவின் சதி’ என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். #BJP #AkhileshYadav

லக்னோ,

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்களான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் ஆகியோர் நீண்ட ஆண்டுகளாக அரசு பங்களாவை ஆக்கிரமித்து தங்கி இருந்தனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, உடனடியாக அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து, மாயாவதி, அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், ராஜ்நாத் சிங், திவாரி ஆகியோர் அரசு பங்களாவை கடந்த வாரம் காலி செய்தனர். சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பங்களாவை காலி செய்த போது அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பங்களாவில் பல்வேறு இடங்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக புகைப்படங்களும் வெளியாகியது.

இதற்கிடையே பங்களாவில் இருந்த விலை உயர்ந்த குளியல் தொட்டி, தண்ணீர் வரும் விலை உயர்ந்த டேப், அழகுக்காக வைக்கப்பட்டிருந்த செடிகள், விளக்குகள் போன்றவற்றை எடுத்து சென்றுவிட்டதாக பா.ஜனதா குற்றம்சாட்டுகிறது. சமையல் கூடம், சைக்கிள் ஓட்டும் இடம், பூங்கா ஆகியவற்றையும் சேதப்படுத்தி இருக்கின்றனர் என பா.ஜனதா குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக மீடியாக்களில் வெளியாகிய புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு விசாரித்து, சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு ஆளுநர் உத்தரவிட்டார். இவ்விவகாரம் பூதகரமாகி உள்ள நிலையில் இது அனைத்தும் பா.ஜனதாவின் சதிதிட்டம்தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

வீட்டை காலி செய்த பின்னர் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவுடன்தான் வீடு சேதப்படுத்தப்பட்டு உள்ளது என குற்றம் சாட்டும் அகிலேஷ் யாதவ், வீட்டில் இருந்து என்னுடைய பொருட்களை மட்டுமே எடுத்துச் சென்றேன், என்னுடைய கோவிலை என்னிடமே கொடுத்து விடுங்கள் என கூறிஉள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இடைத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை தழுவுவதால் பாரதீய ஜனதா கவலையில் உள்ளது. இது அனைத்துமே பா.ஜனதாவின் சதிதிட்டமாகும் என கூறியுள்ளார். இதற்கிடையே காலி செய்த பிற முன்னாள் முதல்-மந்திரிகளின் வீட்டில் உள்ள நிலை என்னவென்று தெரிவிக்காதது ஏன்? என சமாஜ்வாடி கட்சி கேள்வியை எழுப்பியது.


Next Story