சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியை புறக்கணித்தார் நிதிஷ் குமார்


சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியை  புறக்கணித்தார் நிதிஷ் குமார்
x
தினத்தந்தி 21 Jun 2018 12:04 PM GMT (Updated: 21 Jun 2018 12:04 PM GMT)

சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் புறக்கணித்தது பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா,

ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014 -ம் ஆண்டு 175 நாடுகளின் ஆதரவுடன் ஜூன் மாதம் 21 ஆம் தேதியை உலக யோகா தினமாக கொண்டாட தீர்மானம் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் அமைச்சர்கள், பிரபலங்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடத்தப்படன. உத்தரகாண்ட் மாநிலம் டோராடூனில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி யோகாசனங்கள் செய்தார். 

இதேபோல், பீகார் மாநிலம் பாட்னாவில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் பங்கேற்காதது வியப்பை ஏற்படுத்தியது.  

ஆனால், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் நிதிஷ் குமார் பங்கேற்காத விவகாரத்தை அரசியல் ஆக்க கூடாது என்று தெரிவித்தன. ஐக்கிய ஜனதா தளம் கட்சி இது பற்றி கூறும் போது, “ யோகா சர்வதேச தினமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, பல ஆண்டுகளாக யோகா செய்வதை நிதிஷ் குமார் வாடிக்கையாக கொண்டுள்ளார். எனவே, நிதிஷ்குமாரின் தனிப்பட்ட முடிவுகளை அரசியல் ஆக்குவது தவறானதாக அமையும்” என்று தெரிவித்தது. 

Next Story