ராஷ்டிரபதி பவனில் தென்கொரிய அதிபருக்கு உற்சாக வரவேற்பு


ராஷ்டிரபதி பவனில் தென்கொரிய அதிபருக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 10 July 2018 5:58 AM GMT (Updated: 10 July 2018 5:58 AM GMT)

நான்கு நாள் சுற்றுபயணமாக இந்தியா வந்திருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னிற்கு இன்று ராஷ்டிரபதி பவனில் மிகுந்த உற்சாகத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. #MoonJaein

புதுடெல்லி,

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், அவரது மனைவி அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் குழுவினர் நான்கு நாள் பயணமாக இந்தியாவில் வந்துள்ளனர். தென்கொரியா அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள மூன் ஜே இன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். 

நொய்டாவில் சம்சங் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்ட மூன் ஜே இன், நொய்டாவுக்கு டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடியுடன் பயணம் செய்தார். இந்நிலையில் இன்று காலை ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள வந்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் அவரது மனைவி கிம் ஜூங் சூக்கிற்கு மிகுந்த உற்சாகத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோரை சந்திக்கும் மூன் ஜே இன், அவர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதன் பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தென்கொரியா அதிபர் சந்திக்க இருக்கிறார். இச்சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் பிரதமர் சார்பில் தென்கொரியா அதிபருக்கு விருந்தளிக்கப்படுகிறது. இதன் பின்னர் அதிபர் மூன் ஜே இன் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு புதன் கிழமை காலை புதுடெல்லியிலிருந்து நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story