ஆன்மீக தலைவர் தாதா வஸ்வானி 99வது வயதில் காலமானார்


ஆன்மீக தலைவர் தாதா வஸ்வானி 99வது வயதில் காலமானார்
x
தினத்தந்தி 12 July 2018 7:09 AM GMT (Updated: 12 July 2018 7:09 AM GMT)

மகாராஷ்டிராவில் ஆன்மீக தலைவர் தாதா வஸ்வானி வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல் நல குறைவால் 99வது வயதில் காலமானார்.

புனே,

பாகிஸ்தானில் ஐதராபாத் நகரில் சிந்தி குடும்பத்தில் பிறந்தவர் தாதா வஸ்வானி (வயது 99).  இவர் மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள சாது வஸ்வானி என்ற ஆன்மீக அமைப்பின் தலைவராக இருந்து வந்துள்ளார்.  இந்த அமைப்பு சமூக மற்றும் தொண்டு சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.

இது தவிர கல்வி அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளையும் நகரில் இயக்கி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் வீடியோ இணைப்பு வழியே வஸ்வானியின் 99வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உரையாற்றினார்.  புதிய இந்தியாவின் இலக்குகளை அடைய வஸ்வானியின் ஆசிகள் உதவும் என மோடி கூறினார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த வருடம் மே மாதம் சாது வஸ்வானி சர்வதேச பள்ளி கூடத்தினை தொடங்கி வைப்பதற்காக அங்கு சென்றார்.  மூத்த பாரதீய ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி இங்கு அடிக்கடி வருகை தருபவர் ஆவார்.

வஸ்வானி, மனிதநேயமிக்கவராக, தத்துவவாதியாக, கல்வியாளராக, சொற்பொழிவாளராக மற்றும் சமய பிரிவற்ற ஆன்மீக தலைவராக புகழப்படுவதுடன் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தவர்.  சைவ உணவை ஊக்குவித்தவர்.

அடுத்த மாதம் இவரது 100வது பிறந்த தினத்தினை பெரிய அளவில் கொண்டாட இந்த அமைப்பு திட்டமிட்டு இருந்தது.  இந்நிலையில் உயிரிழந்த அவரது உடல் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இந்த அமைப்பில் வைக்கப்பட்டு உள்ளது.


Next Story