தேசிய செய்திகள்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து: அரியானா முதல்வர் அறிவிப்பு + "||" + Sexual offenders likely to lose driving licence, pension in Haryana

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து: அரியானா முதல்வர் அறிவிப்பு

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து: அரியானா முதல்வர் அறிவிப்பு
அரியானா மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். #Haryana #NoDrivingLicense
சண்டிகார்,

அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். இது குறித்து முதல்வர் பேசுகையில்,

”மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்படும். அவர்களுக்கு ரேசன் உரிமம் மட்டும் வழங்கப்படும். நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் வரையில் இத்திட்டம் இடைநீக்கத்தில் இருக்கும். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துவங்கியுள்ள இத்திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியான சுதந்திர தினம் அல்லது ஆகஸ்ட் 26-ம் தேதி ரக்‌ஷா பந்தன் அன்று துவங்கப்படும். 

மேலும் காவல்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் ஈவ்டீசிங் வழக்குகள் தடையின்றி விசாரிக்கப்படும். விசாரணை அதிகாரிகள் பாலியல் குற்ற வழக்கு விசாரணையை 1 மாதம் மற்றும் ஈவ்டீசிங் வழக்கு விசாரணையை 15 நாட்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும். ஆறு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்படும். இது குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகளை விரைவில் சந்திக்கவுள்ளேன்” எனக் கூறினார். 

முன்னதாக, மாநிலத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தை முதல்வர் கட்டார் அறிவித்தார்.