கல்லூரி மாணவி உயிர் இழந்த விவகாரம் : பயிற்சியாளர் அங்கீகாரம் பெற்றவர் அல்ல


கல்லூரி மாணவி உயிர் இழந்த விவகாரம் : பயிற்சியாளர் அங்கீகாரம் பெற்றவர் அல்ல
x
தினத்தந்தி 13 July 2018 11:00 PM GMT (Updated: 13 July 2018 10:13 PM GMT)

கோவை அருகே தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்த ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றவர் அல்ல என்று உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

புதுடெல்லி,

கோவை அருகே தனியார் கல்லூரியில் நடந்த, மாடியில் இருந்து குதிக்கும் பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயிற்சியை அளித்த ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் அல்ல என்றும், போதிய பாதுகாப்பு இல்லாத பயிற்சிக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளிப்பது கிடையாது என்றும், கல்லூரியில் நடந்த பயிற்சிக்கும் ஆணையத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் கூறி இருக்கிறது.

இதேபோல் பயிற்சியாளர் ஆறுமுகம் தங்களிடம் அங்கீகாரம் பெறவில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறி உள்ளது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கோவை அருகே உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆறுமுகம் என்பவர் நடத்திய, பேரிடர் காலங்களில் தப்பிப்பது குறித்த பயிற்சியின் போது என்.லோகேஸ்வரி என்ற மாணவி உயிர் இழந்த சம்பவம் ஊடகங்கள் மூலமாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இளம் மாணவி உயிர் இழந்த இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது ஆகும். மாணவியின் குடும்பத்துக்கு இதயபூர்வமான அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பயிற்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு பயிற்சி அளித்தவர், இது போன்ற பயிற்சி அளிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றவர் அல்ல. போதிய முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பயிற்சிகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளிப்பது இல்லை.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் கமல் கிஷோர் கூறுகையில், கோவை அருகே உள்ள கல்லூரியில் பயிற்சி அளித்த ஆறுமுகம் எங்களால் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் அல்ல என்றும், இதுபோன்ற பயிற்சிகளை அளிக்க சில வரைமுறைகளை வைத்து இருப்பதாகவும், மாடியில் இருந்து குதிக்கச் சொல்வது எங்கள் பயிற்சி திட்டத்திலேயே கிடையாது என்றும் தெரிவித்தார்.


Next Story