ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனு தள்ளுபடி


ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 13 July 2018 11:15 PM GMT (Updated: 13 July 2018 10:20 PM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

புதுடெல்லி,

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்தனர். கடந்த மே மாதம் 22–ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

போலீசாரின் இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு கமி‌ஷன் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளும் நடந்து வருகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கேட்டு தே.மு.தி.க.வை சேர்ந்த ஜி.எஸ்.மணி என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் எனவும், கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அத்துடன் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சமும், படுகாயமடைந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சமும் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வக்கீல் ஜி.எஸ்.மணியே நேரில் ஆஜரானார்.

வழக்கின் விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், ‘இது போன்ற மனுக்கள் ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருவதால், இதனை இங்கு விசாரணைக்கு ஏற்க முடியாது’ என்று அறிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரர் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம் என்றும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.


Next Story