சுங்க சாவடியை அடித்து உடைத்த எம்.எல்.ஏ.


சுங்க சாவடியை அடித்து உடைத்த எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 18 July 2018 10:00 AM GMT (Updated: 18 July 2018 10:00 AM GMT)

கேரளாவில் சுங்க சாவடியில் வரி கட்டும்படி கூறியதில் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ. ஜார்ஜ் ஊழியர்களிடம் தகராறு செய்து அங்கிருந்த தடுப்புகளை உடைத்து எறிந்துள்ளார்.

திருச்சூர்,

கேரளாவில் பூஞ்ஜார் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பி.சி. ஜார்ஜ்.  கேரள ஜனபக்ஷம் என்ற கட்சியின் நிறுவன தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவர் திருச்சூரில் இருந்து கொச்சி நோக்கி தனது ஆடம்பர காரில் சென்று கொண்டு இருந்துள்ளார்.  அவரது கார் நேற்றிரவு பள்ளியக்கரை பகுதிக்கு வந்தபொழுது சுங்க சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

அந்த சுங்க சாவடியில் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணியில் இருந்துள்ளனர்.  அவரது காரில் எம்.எல்.ஏ. என்ற பெயர் பலகை இருந்தபொழுதும் அவரை கடந்து செல்ல ஊழியர்கள் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் காரில் இருந்து கீழே இறங்கிய ஜார்ஜ் தனது உதவியாளர்களுடன் சேர்ந்து அங்கிருந்த தடுப்புகளை சேதப்படுத்தி உள்ளார்.  இது சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது.

அவரிடம் சாலை வரி கட்டும்படி அங்கிருந்த ஊழியர்கள் கூறியதற்காக ஆத்திரம் அடைந்து சுங்க சாவடி தடுப்புகளை எம்.எல்.ஏ. உடைத்துள்ளார் என போலீசார் இன்று கூறியுள்ளனர்.  எனினும், சுங்க சாவடி அதிகாரிகள் புகார் எதுவும் அளிக்காத நிலையில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.


Next Story