ஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும்: மம்தா பானர்ஜி கருத்து


ஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும்: மம்தா பானர்ஜி கருத்து
x
தினத்தந்தி 22 July 2018 12:00 AM GMT (Updated: 21 July 2018 11:40 PM GMT)

ஜெயலலிதா இருந்திருந்தால், நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் போது, பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தா,

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார்.

ஜெயலலிதா இருந்திருந்தால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக (தீர்மானத்துக்கு ஆதரவாக) ஓட்டுப்போட்டு இருப்பார்கள் என்று அப்போது அவர் கூறினார். அத்துடன் தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-

பாரதீய ஜனதா மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பல மாநிலங்களில் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து உள்ளது. முன்பு பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் அதில் இருந்து விலகிவிட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தில் சிவசேனாவும் பாரதீய ஜனதாவை கைவிட்டு விட்டது.

எனவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அடையும். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்துள்ள போதிலும், அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு நூற்றுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும்.

ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டாட்சி முன்னணி என்ற புதிய அணியை தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நடைபெற இருக்கும் பிரமாண்ட பேரணிக்கு அந்த கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். மத்தியில் பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்கான பணிகளை இந்த மாதமே தொடங்க இருக்கிறோம். இது அடுத்த மாதத்தில் இருந்து தீவிரம் அடையும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Next Story